தியாகச்சாவடைந்த எல்லோருக்கும் அஞ்சலி

தமிழீழ விடுதலையின் பெயரால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு முள்ளிவாய்க்கால் நிலத்தில் 2009 இல் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில், இணைந்தும் இணைக்கப்பட்டும் தியாகச்சாவடைந்த அனைவருக்கும்,
இயலுமைக்கேற்ப நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடாத்தித் தியாகச்சாவைத் தேர்ந்துகொண்ட அந்த அமைப்பின் தலைவருக்கும்,
விடுதலையில் பெயரால் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து தியாகச்சாவடைந்த எல்லோருக்கும்,
ஈழத்தமிழராக என் ‘அஞ்சலி’ எப்போதைக்குமானது.
பாரபட்சமற்ற ‘விடுதலை அரசியல்’ சார் அணுகுமுறையும் தளை நீக்கச் சிந்தனையோட்டமும் மனிதாபிமானக் கண்ணோட்டமும் கொண்ட இத்தகைய அஞ்சலி, ஈழத்தமிழர்களுக்கு அவசியமானது.
தியாகச்சாவடைந்தோருக்கு அஞ்சலி செய்வது மற்றும் அத்தகையோருக்கான அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவது போன்ற நடவடிக்கைகள், பிழைப்புவாதப் போலிச் செயற்பாடுகளாகவோ மோசடி உள்நோக்கங்கள் கொண்ட குழுச் செயற்பாடுகளாகவோ வெற்றுச் சடங்குகளாகவோ மாறிவிடக் கூடாது.
உயிர்த்தியாகிகளுக்கான அஞ்சலி சார் நடைமுறைகள், விடுதலை அரசியல் சார் செயற்பாடுகளின் பகுதிகளாக அமைவதுதான் ஆரோக்கியமானது.
விடுதலைப் போராட்டப் பயணத்தின் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்களால் நிகழ்ந்துவிட்ட உச்சபட்ச உயிர்த்தியாகங்கள், உரிய மதிப்பீடுகளுடன் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.
அற மதிப்பீடுகளோ அரசியற் பெறுமானங்களோ இன்றி ஊதாரித்தனமாகச் செலவுசெய்யப்பட்ட உயிர்த்தியாகங்கள் பற்றிய புரிதலும் இயக்கங்களின் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் போன்றவற்றால் நிகழ்ந்துவிட்ட உயிர்த்தியாகங்கள் பற்றிய கரிசனமும் அவசியமானவை.
உயிர்த்தியாகங்களை மோசமான உள்நோக்கங்களுடன் மறைமுகமாக ஊக்குவிப்பதும் ‘சுயநல அரசியல்’ சார்ந்து பயன்படுத்திக்கொள்வதும் மானுட இழிவு.
உயிர்த்தியாகிகளைப் பாரபட்சப்படுத்தி, ‘முத்திரை’ குத்துவதும் அதீதமாக மகிமைப்படுத்த (glorifying) விழைவதும் ஆரோக்கியமற்ற செயற்பாடுகள் ஆகும். அவை, சமூக உளவியல் சார்ந்து எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் கருத்தியற் தளைகளுக்கும் எதிரான நிலைப்பாடுகளை எடுக்கக்கூடிய, விடுதலைச் சிந்தனையும் அர்ப்பணிப்புச் செயற்பாடுகளும் கொண்ட மானுட நேசர்களே ‘போராளிகள்’ ஆக முடியும்.
அத்தகைய போராளிகளால் மட்டுமே, சமூக மட்டங்களில் நிகழக்கூடிய இழிவுச் செயல்களுக்கும் மோசடிகளுக்கும் குழப்பவாதங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவும் ‘அரசியல் சரித்தன்மை’ (political correctness) பார்த்துச் செயற்படவும் முடியும்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்தில் அத்தகைய போராளிகளாக எத்தனைபேர் தேறுவார்கள்?
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து புழக்கத்திற்கு வந்த ‘மாவீரர்’, ‘வீரச்சாவு’ ஆகிய சொற்பதங்களுக்கு மேலான கனதியான அர்த்த பரிமாணங்களுடன் ‘உயிர்த்தியாகி’ மற்றும் ‘தியாகச்சாவு’ ஆகிய சொற்தொடர்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2024-11-27
அமரதாஸ்