மாற்று சினமா முயற்சிகளின் முன்னோடி ஜெயபாரதி

 
தமிழ்த் திரையுலகில் ‘மாற்று சினமா’ முயற்சிகளின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜெயபாரதி அவர்கள், ‘திரள் நிதி’ (crowdfunding) மூலம் ‘குடிசை’ என்னும் தனது முதலாவது திரைப்படத்தை உருவாக்கினார். 1979 இல் அது வெளியானது. அண்மையில் மறைந்த, குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஸ் அவர்கள் நடித்த முதலாவது திரைப்படம் ‘குடிசை’ என்பது குறிப்பிடத்தக்கது.
 
‘குடிசை’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ஊமை ஜனங்கள்’ (1984), ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’ (1988), ‘உச்சி வெயில்’ (1991), ‘நண்பா நண்பா’ (2002), ‘குருஷேத்திரம்’ (2006), ‘புத்ரன்’ (2010) ஆகிய திரைப்படங்களை ஜெயபாரதி இயக்கியிருக்கிறார். 
 
திரையுலகில், திரு. ரஜினிகாந்த், திரு. கமல்ஹாசன், திரு. சத்யராஜ் உள்ளிட்ட பல நெருங்கிய நண்பர்களை அவர் கொண்டிருந்தார். எனினும், அவர் பொருளாதார நெருக்கடிகளோடு இருந்த காலத்தில் அவருக்குப் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. 
 
பிற்காலத்தில் அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு எற்பட்டிருந்தது. அவ்வப்போது தொலைபேசி மூலம் அழைத்து உரையாடுவார். பல்வேறு அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரது தேவைகளை அறிந்து, முடிந்த அளவிலான சிறு உதவிகளைச் செய்திருக்கிறேன். 
 
‘இங்கே எதற்காக?’, ‘சினிமாக்காரர்கள்’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். ‘நண்பா நண்பா…’ திரைக்கதை நூலாக்கம் பெற்றுள்ளது. அவரது நூல்களையும் அவர் இயக்கிய சில திரைப்படங்களின் பிரதிகளையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.
 
சினமா தொடர்பான அவரது அணுகுமுறைகளிற் போதாமைகள் இருந்தன. எனினும், தன்னளவில் சினமா தொடர்பான மாற்றுச் சிந்தனைகளோடு அவர் இயங்கினார். 
 
ஜெயபாரதி போன்று, திரு. மகேந்திரன், திரு. பாலுமகேந்திரா போன்றவர்கள் மாற்று சினமா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோருடன் எனக்கு நேரடித் தொடர்பாடல் இருந்தது. அத்தகையோருக்குக் கிடைத்தது போன்ற ‘புகழ்’ வெளிச்சமும் வாய்ப்புகளும் ஜெயபாரதிக்குக் கிடைக்கவில்லை.
 
சமூக அக்கறைகளோடு இயங்கி நலிவடையும் கலைஞர்கள், வாழும் காலத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாகத் தொடரும் கசப்பான யதார்த்தம்.
 
திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் நண்பருமாகிய ஜெயபாரதி அவர்கள் மறைந்துவிட்டார் என்னும் தகவலை இன்று அறிந்து வருந்துகிறேன். அன்னாருக்கு அஞ்சலி…
 
அமரதாஸ்
2024-12-06