ஈழத்தமிழ் அணு விஞ்ஞானி இலகுப்பிள்ளை எழுதிய சுய சரிதம்

 
சர்வதேச மட்டங்களில் ஒரு அணு விஞ்ஞானியாக அறியப்பட்ட வே. இலகுப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘அணுவைத் துளைத்து…’ என்னும் நூல் அண்மையிற் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டுள்ளது.
 
ஈழத்தமிழர் மத்தியில் இருந்து உருவாகிய ஒரு அணு விஞ்ஞானியின் ‘சுய சரிதம்’ என்று சொல்லப்பட்டுள்ள இந்த நூலில், இலகுப்பிள்ளை சார்ந்த பல்வேறு அனுபவங்களும் ஒளிப்படங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
 
அமெரிக்கா, கனடா, ரசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு வெவ்வேறு அணு விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் இலகுப்பிள்ளை. அணுக்கதிரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஹிரோசிமா, நாகசாகி, செர்னோபில் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். 
 
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமாகிய அப்துல் கலாம் அவர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர். அவரது வேண்டுகோளுக்கு அமைவாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டவர். பணிகள் சார்ந்து பல்வேறு நாடுகளிலும் வசித்துவந்தவர். 
 
உள்நாட்டுப் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னிப்பகுதியிற் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த சில வேலைத்திட்டங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுசரணையோடு தொடர்ந்து முன்னெடுக்க முயன்றவர் இலகுப்பிள்ளை. அதற்காகப் பலமுறை கிளிநொச்சி நகருக்கு வந்து தங்கியிருக்கிறார். அப்போது அங்கிருந்து அவரைப் பார்த்துப் பேச முடிந்திருக்கிறது. 
 
பால் சார்ந்த தொழிற்சாலை ஒன்றையும் தையல் நிறுவனம் ஒன்றையும் கிளிநொச்சியில் நிர்மாணித்திருந்தார். இவற்றுக்காக, ஆறு கோடிகளுக்கு அதிகமான சொந்தப் பணத்தைச் செலவுசெய்திருக்கிறார். அப்போது கனடாவில் அவருக்கு இருந்த வீட்டையும் நிலத்தையும் விற்றுப் பணம் திரட்டியதாகச் சொல்லியிருக்கிறார். 
 
சுனாமி அனர்த்தத்தின் பின்னர், கனடாவிலிருந்து மருத்துவர்கள் சிலரை அழைத்துவந்து மருத்துவ நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், இவரைப் பலமுறை அழைத்து உரையாடியிருக்கிறார்; விருந்துபசாரம் செய்திருக்கிறார். இதனை இலகுப்பிள்ளை விரிவாக நூலில் எழுதவில்லை. (சில நேர்காணல்களில் ஒரளவு குறிப்பிட்டிருக்கிறார்.) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ‘தலைவர்கள்’ பலரைச் சந்தித்திருப்பதாக மேலோட்டமாகவே நூலிற் குறிப்பிட்டிருக்கிறார். 
 
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ‘நிழல் அரசு’ உருவாக்கம் பெற்றிருந்தது. நிர்வாகக் கட்டமைப்பு சார்ந்த போதாமைகளைக் கொண்டிருந்தாலும், நிழல் அரசின் தோற்றப்பாடு பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், நிழல் அரசு சார்ந்த செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். (இதன் சாதக, பாதக அம்சங்கள் வேறு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயப்படவேண்டியவை. மேலும், ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ உருவாக்கம் பெற்றுச் செயலிழந்து போன வரலாறு மறுவாசிப்பிற்குரிது.) 
 
அப்போது, போர் சார்ந்த நடைமுறைகளால் மூடுண்டிருந்த வன்னிப்பகுதிக்கு வெளியில் இருந்து வந்துசெல்லக்கூடிய சிலரைத் தேவைகளுக்கேற்ப அழைத்துச் சந்தித்து விருந்துபசாரங்களைச் செய்திருக்கிறார் பிரபாகரன். (சர்வதேச மட்டங்களில் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்தும் ஈழத்தமிழர் மத்தியில் இருந்தும் ‘சந்திக்க வேண்டிய’ பலரை அழைத்துச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்பது வேறு விடயம்.) 
 
அரசியல் ரீதியில் அடித்தளங்களைப் பலப்படுத்திக்கொள்ளாமல், நிழல் அரசு என்னும் கட்டுமானத்தை மேலெழுப்பக்கூடிய முயற்சிகள் அவசரகதியில் நிகழ்ந்திருக்கின்றன என்பது கசப்பான யதார்த்தம். 
 
நிழல் அரசைப் பலப்படுத்தும் வகையில், வெளித்தரப்பினரையும் புவிசார் அரசியல் நிலைமைகளையும்  ராஜதந்திர அணுகுமுறைகளோடு கையாளும் ‘பக்குவம்’ போதிய அளவு பிரபாகரனுக்கு இருக்கவில்லை. சர்வதேச அரசியல் நிலைமைகள், விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்குச் சாதகமின்றிப் போய்க்கொண்டிருக்கும் நிலையிலும் ஆயுதப் போராட்டத்தினால் மட்டுமே ‘தமிழீழம்’ என்னும் தனி நாட்டை உருவாக்கிவிட முடியும் என்னும் நம்பிக்கையுடன் பிரபாகரன் இருந்தார். 
 
இத்தகைய யதார்த்தத்தினை அப்போது பிரபாகரனைச் சந்தித்த இலகுப்பிள்ளை போன்ற ஈழத்தவர்களோ தமிழ் நாட்டவர்களோ முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.
 
எப்போதும் சரிந்துபோய்விடக்கூடிய நிலையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க நிழல் அரசின் அனுசரணையோடு, நல்லெண்ண அடிப்படையில் இலகுப்பிள்ளை கட்டியெழுப்பிய பொருளாதாரக் கட்டுமானங்களும் விரைவாகச் சரிந்துபோய்விட்டன என்பது வருத்தத்திற்குரியது. ஆனாலும், அக் காலத்தில் அவர் முன்னெடுத்த அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் வன்னி மக்கள் சிலரேனும் குறுகிய காலம் பயனடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்படியொரு நூலை அவர் எழுதியிருக்காவிட்டால், அவரது பிரத்தியேகமான அனுபவங்களைப் பிறர் அறியமுடியாமற் போயிருக்கும். 
 
முதுமையிலும் ஆரோக்கியமாக வாழும் இலகுப்பிள்ளை, தமிழ்ச் சமூகத்தினாற் கவனிக்கப்படவும் மதிப்பளிக்கப்படவும் வேண்டிய ஈழத்தமிழ் அணு விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நூல் குறித்தும் அவரது பணிகள் குறித்தும் அவருடன் விரைவில் உரையாட வேண்டும்.
 
நூலாசிரியரிடமிருந்து இந்த நூலைப் பெற்று, யாழ்ப்பாணத்தில் இருந்து தனுசன் அவர்கள் எனக்காகக் கொடுத்துவிட்டிருந்தார். அவருக்கும், சுவிஸ் நாட்டிற்குக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த ஜெயா அவர்களுக்கும் நன்றி.
 
2024-12-24
அமரதாஸ்