நிலவன் என்னும் மோசடியாளருக்கான பகிரங்க மடல் 

 
அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் நிலவன் அவர்கள், தனது முகநூலிலும் ‘உயிர்ப்பூ’ (uyirpu.com) என்னும் இணையத்தளத்திலும் என்னைப்பற்றிய அவதூறான பதிவுகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பரப்பிவந்திருக்கிறார். 
 
எனது பெயரைப் பயன்படுத்தி, பித்தலாட்டம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுப் பழைய அவதூறுப் பதிவுகளை இப்போது பொதுவெளியிற் பகிர்ந்திருக்கிறார் நிலவன். இத்தகைய இழி செயல்கள் கண்டனத்திற்குரியவை. உண்மையில், நிலவன் என்பவரே பல பித்தலாட்டங்களைச் செய்திருக்கிறார். அவை பற்றி, அவசியமெனில் விரிவாகப் பேசலாம்.
 
நிலவன் என்பவரும் வேறு சிலரும் இணைந்தும் தனித்தும், எனது போர்க்கால ஒளிப்படங்கள் தொடர்பில் முன்னெடுத்த சர்ச்சைகளுக்கு அவ்வப்போது எதிர்வினைகளைச் செய்திருக்கிறேன். எனது முகநூலிலும் இணையத்தளத்திலும் (widevisionstudio.com) அவை அப்படியே இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆராயாமல், என்னைப்பற்றி நிலவன் எழுதிய பொய்களையும் புனைவுத் தகவல்களையும் அவதூறுகளையும் சிலர் பார்த்துவிட்டு, அவற்றை ஆதாரமாகக் கொண்டு எனக்கெதிரான புதிய அவதூறுகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது. உண்மைகளை அறியும் ஆர்வம் கொண்டவர்கள், முன்னைய எனது எதிர்வினைகளின் இணைப்புகளை ஆராய்ந்து பார்க்கலாம்.
 
நிலவன் என்பவர் சர்ச்சைகளை வலிந்து உருவாக்கிப் பிரபலம் தேடிக்கொள்பவர் என்னும் புரிதல் இருந்தமையால், அவரது பெயரைப் பொதுவெளியிற் பயன்படுத்துவதில்லை. தவிர, ஆரோக்கியமற்ற விவாதங்களைத் தொடர நான் விரும்புவதில்லை. அவதூறுகளுக்குத் தனித்தனியாக ‘விளக்கம்’ சொல்ல வேண்டியதில்லை. தனது பழைய பதிவுகளை அவரே தற்போது மீளவும் பகிர்ந்துவருவதில் என்னை அவதூறு செய்யும் நோக்கம் மட்டுமே இருக்க முடியும். திரு. சீமான் தொடர்பான எனது விமர்சனங்களைத் தொடர்ந்து, என் மீது பாய்ச்சப்படுகிற ‘ஊடக வெளிச்சம்’ அவரது காழ்ப்புணர்வை அதீதமாக்கியிருக்கிறதோ என்னவோ?
 
நிலவன் தொகுத்திருக்கும் நூல் ஒன்றில், இலங்கை உள்நாட்டுப் போர்க்காலத்தில் நான் உருவாக்கிய எனது ஒளிப்படங்கள் தவறான முறையிற் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை அண்மையில் அவதானிக்க முடிந்தது.
 
பதிப்புரிமை கொண்ட எனது ஒளிப்படங்களை ‘உரிய’ முறையில் யாரும் பயன்படுத்தலாம். (பலரிடம் அவற்றின் மூலப்பிரதிகள் இருக்கின்றன.) மோசடியாகவோ தவறான தகவல்களுடனோ பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இது போன்ற நடவடிக்கைகள் தொடருமாயின் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
 
ஏற்கெனவே, நிலவன் என்பவர் எனது ஒளிப்படங்களை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் மோசடியாகப் பயன்படுத்தியமைக்கு ஆதாரங்கள் உள்ளன.
 
Trevor Grant என்னும் அவுஸ்திரேலிய ஊடகருக்கு, உதவியாளர் ஒருவர் மூலம் பல ஒளிப்படங்களைத் தவறான முறையில் நிலவன் பகிர்ந்திருக்கிறார். அந்தப் படங்களோடு அந்த ஊடகர் எழுதி வெளிவந்திருந்த நூல் (Sri Lanka’s Secrets), பின்னர் சர்ச்சைக்குள்ளானது.
 
தன்னால் அந்த நூலாசிரியருக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களும் தன்னால் உருவாக்கப்பட்டவை என்று பொய் சொல்லியதோடு, தனது அனுபவங்களாகச் சில கருத்துகளையும் நூலுக்காகச் சொல்லியிருக்கிறார் நிலவன். அவருக்கான மொழிபெயர்ப்பாளராக இருந்தவராலும் நூலாசிரியராலும் நூலை வெளியிட்ட நிறுவனத்தாராலும் நிலவன் செய்த பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த மோசடி பற்றி எனக்குத் தெரியவந்தது.
 
நிலவன் செய்த மோசடியை அந்த நூலாசிரியர் இறப்பதற்கு முன் அறிந்திருந்தார். எனது ஒளிப்படங்களுக்காக நன்றி தெரிவித்து, நூலின் பிரதி ஒன்றைக் கையெழுத்திட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து எனது முகவரிக்கு அனுப்பியிருந்தார். அவருடன் மின்னஞ்சல் வழியான தொடர்பாடல் இருந்தது. நான் மறுத்தபோதும், எனது ஒளிப்படங்களைப் பயன்படுத்தியமைக்காகப் பணம் செலுத்துவதற்கு விரும்பினார். அவருடனான எனது தொடர்பை நன்கு அறிந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
 
நிலவனின் இந்த மோசடி பற்றிய பின்னணிகளையும் ஆதாரங்களையும் சுட்டிக்காட்டும் அறிக்கையினை, அந்த நூலை வெளியிட்ட நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்திருக்கிறேன். (பல ஆண்டுகளுக்கு முன்னர்) அந்த நூலில் இடம்பெற்ற பெரும்பாலான ஒளிப்படங்கள் என்னுடையவை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த நூல், மறுபிரசுரம் செய்யப்படுமாயின் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். நூலாசிரியர் இப்போது இல்லை என்பதால் நூலை வெளியிட்ட நிறுவனத்திற்கு எனது பரிந்துரைகளை அனுப்பியிருக்கிறேன்.   
 
நிலவனின் மோசடியால், நூலாசிரியரின் மொழிபெயர்ப்பாளராக இருந்து நூலாக்கப் பணிகளில் ஈடுபட்ட ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வே தமிழ்ச் சங்க நிர்வாகத்திற்கும் எனக்கும் எழுதிய மின்னஞ்சலில் நிலவன் செய்த மோசடி தொடர்பாக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ‘தமிழ்ப்பொடியன்’ என்பவர், கவிதை வடிவில் எழுதிய சில பிரதிகளை, நிலவன் என்பவர் தன்னுடையவை போலாக்கி ஒரு நூலை உருவாக்கியிருக்கிறார். இதை நிரூபிக்கும் ஆதாரம் தமிழ்ப்பொடியன் என்பவரிடம் இருக்கிறது. இது பற்றிய சர்ச்சை வந்தபோது, அந்த நூலை வெளியிட்ட நிறுவனத்தினரால் நிலவனின் மோசடி உறுதிசெய்யப்பட்டது. நேரில் உண்மைகளை நிரூபித்துக்கொள்ள நிலவனை அழைத்திருக்கிறார் தமிழ்ப்பொடியன். அவரைச் சந்திக்கப் பயந்து திரியும் நிலவனின் மோசடிகளை அறிந்த சிலர், அவுஸ்திரேலியாவில் இன்னமும் இருக்கிறார்கள்.
 
இப்படியாக, ஊடகவெளியில் அல்லது பதிப்புரிமை சார்ந்த விடயங்களில் புலமைச் சொத்து மோசடிகளைச் செய்திருப்பவர் நிலவன்.
 
எனக்கு எதிராக அவறூதுகளிலும் மோசடிகளிலும் நிலவன் தொடர்ந்து ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பதிப்புரிமை கொண்ட எனது ஒளிப்படங்களை எனது அனுமதியின்றி அவர் தவறாகப் பயன்படுத்துவது, சட்டவிரோதமானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எனது ஒளிப்பட நூலில் (THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES) இருக்கும் சில ஒளிப்படங்களின் ‘மூலப் பிரதிகள்’ நிலவனிடம் இருக்கின்றன. இன்னொருவரின் பெயருடனோ தவறான தகவல்களுடனோ அவற்றை நிலவன் பயன்படுத்த முடியாது. எனது ஒளிப்பட நூலில் இருக்கும் ஒளிப்படங்கள் அனைத்தும் என்னால் உருவாக்கப்பட்டவை. நூலில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். 
 
எனது சுயாதீன நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலும் நிலவன் செயற்படுவாராயின், வருங்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். 
 
என்னைப் பற்றிய அவதூறுகளுக்கு, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களை, நிலவனின் மோசடிகளுக்குத் துணை போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
தேவை ஏற்படுமாயின், நிலவன் என்பவரின் மோசடிகளை அம்பலப்படுத்தும் விரிவான அறிக்கையினை வருங்காலத்தில் ஆதாரங்களுடன் வெளியிட முடியும்.
 
2025-01-29
அமரதாஸ்