இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, அண்மையில் நான் நிகழ்த்திய உரை இது. (இணைப்பில் வீடியோப் பதிவு உள்ளது.)
ஊடகரும் எழுத்தாளருமான நண்பர் சண் தவராசா அவர்களின் ‘காணாமல் போனவர்கள்’ என்னும் சிறுகதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ தொடர்பான கருத்தரங்கும் 2025-04-06 அன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றன.
நேர நெருக்கடி காரணமாக, நான் திட்டமிட்டிருந்தபடி திருப்திகரமாக அந்தக் கருத்தரங்கில் உரை நிகழ்த்த முடியவில்லை. சில விடுபடல்கள் இருந்தாலும், பல முக்கியமான விடயங்களைப் பேசியிருக்கிறேன்.
***
// இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான மோசமான குற்றச்செயல்களுக்கு நீண்டகாலத் துயரார்ந்த வரலாறு இருக்கிறது. வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி அறிவுத் துறையாக அணுகுவோர், அறியப்படுகிற வரலாற்றிலே மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவார்கள்.
நபர்களை வலிந்து காணாமல் ஆக்குதல் என்னும் குற்றச்செயலை, அரசாங்கத் தரப்புகளோ படையினரோ உளவு நிறுவனங்களோ குழுக்களோ ஆயுதப் போராட்ட இயக்கங்களோ தனி நபர்களோ செய்யக்கூடும். அதற்கான ஆதாரங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காணப்படலாம். எது எப்படியிருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்ந்த விவகாரங்களைப் பாரபட்சமின்றி மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது அவசியம்.
இலங்கை அரச படைகளும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்களும் பல்லாயிரக்கணக்கானோரின் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் எண்ணிக்கை வேறுபாடுகள் இருந்தாலும், காணாமல் ஆக்கப்படுதல் சார்ந்த சம்பவங்களுடன் ஆயுத ரீதியான போராட்ட இயக்கங்களும் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. வெவ்வேறு இயக்கங்களுக்கு இடையிலும் இயக்கங்களுக்கு உள்ளேயும் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகச் செயற்பாடுகள், இயக்கங்களுக்கான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் போன்ற காரணங்களாலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், நீதித்துறை சார்ந்தவர்கள், விடுதலை அரசியல் சார்ந்து செயற்பட முனைவோர் போன்ற அனைத்துத் தரப்பினரும், இத்தகைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. //
இவ்வாறு, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருக்கிறேன்.
***.
அண்மையில் வெளிவந்த, ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் எனது ஒளிப்பட நூலானது, ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ தொடர்பான சில விடயங்களையும் கவனப்படுத்தியிருக்கிறது. இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் நான் உருவாக்கிய ஒளிப்படங்களில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சிலர், சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். உரையில் இது பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டிருந்தாலும், விரிவாகப் பேச முடியவில்லை.
***
தொண்ணூறுகளின் பிற்பகுதியிலே இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ். மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள், செம்மணிப் பகுதியில் இனங்காணப்பட்ட புதைகுழிகள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தன. அவை, முறையாகக் கையாளப்படாமல் இழுத்தடிக்கப்பட்டன. பின்னதாக அந்த வழக்குகளும் காணாமல் ஆக்கப்பட்டன.
2009 இல் இலங்கை இறுதிப் போர் முடிந்தபோது, இலங்கை அரச தரப்பினரிடம் சரணடைந்த தமிழ்த் தரப்பினர் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். திரு. புதுவை இரத்தினதுரை, திரு. யோகரத்தினம் யோகி, திரு. க. வே. பாலகுமாரன் உட்பட, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தொண்ணூறுகளின் முற்பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராகவும் ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்னும் அரசியற் கட்சியின் தலைவராகவும் இருந்த திரு. மகேந்திரராசா மாத்தையா, சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினராற் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்.
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தை அழிக்க சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 1994 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி மாத்தையாவுக்கும் அவரோடு சேர்ந்து செயற்பட்ட ஒரு சில சதிகாரர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.” என்று, சுதந்திர வேட்கை’ என்னும் நூலில் அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் காலப்பகுதியில் மாத்தையா கொல்லப்படவில்லை என்றும் ‘யாழ்ப்பாண இடப்பெயர்வு’ நிகழ்ந்தபோது அவர் கைதியாகவே வன்னிப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.
மாத்தையா கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு ‘மரண தண்டனை’ வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவில்லை.
மாத்தையாவுடன் நெருக்கமாக இருந்ததாகச் சொல்லப்பட்ட வேறு பல போராளிகளும் நியாயமற்ற முறைகளிலே கையாளப்பட்டனர் என்றும், அவர்களிலே சிலர் சித்திரவதைகளுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது.
சித்திரவதைகளுக்குப் பின்னரான ‘ஒப்புதல்’ வாக்குமூலங்களைத் தவிர, மாத்தையா மீதான குற்றச்சாட்டுகளுக்கான நம்பகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கைதிகளாக இந்தியாவில் இருந்துவிட்டு இலங்கைக்குத் திரும்பியிருந்த கிருபன் போன்ற சிலர், இந்தியப் புலனாய்வு அதிகாரிகளின் சதித் திட்டங்களைச் செயற்படுத்தவும் மாத்தையாவைப் பயன்படுத்திக்கொள்ளவும் முயற்சி செய்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
மாத்தையா மீதான குற்றச்சாட்டுகள் நியாயமானவையா என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய சிக்கலான விடயம். குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாத்தையாவை நேரடியாக விசாரணை செய்த சிலர் இப்போது இல்லை. (மிகச் சிலர் எங்காவது இருக்கக்கூடும்.) அவருடன் நேரடியாகப் பழகிய சிலரும் அவரது குடும்பத்தினரும் (மனைவியும் பிள்ளைகளும்) இப்போதும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடத்திலும் நிர்வாக மட்டங்களிலும் அக் காலத்தில் இடம்பெற்ற ‘குளறுபடிகள்’ பலவற்றை நேரடியாக அறிந்த சிலர் இன்னமும் இருக்கிறார்கள். எவரும், மாத்தையா தொடர்பான விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.
ஆனால், மத்தையா வையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சரியாகவோ நேரடியாகவோ அறிந்திராத பலரும் மாத்தையா மீது ‘துரோகி’ என்னும் பட்டத்தை இப்போதும் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். முன்னர் ஒரு நிகழ்வில் நான் உரையாற்றும்போது, ”துரோகி என்னும் வார்த்தையானது, தமிழில் அதிகமதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிற வார்த்தைகளில் ஒன்று” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
பின்வரும் ஐந்து பந்திகளும், ஊடகர் திரு. சிவராம் தொடர்பாக நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றவை. ‘மறுவாசிப்பில் சிவராம்: ஒரு பிராரம்ப வரைவு’ என்னும் தலைப்பில் அமைந்த அக் கட்டுரை, ‘தராக்கி: ஈழத்தமிழ் ஊடக முன்னோடி’ என்னும் பெயரில் 2023 இல் வெளியான நூலில் இருக்கிறது.
// சிவராமைப் போல, ஆபத்துகள் நிறைந்த சூழலில் ஊடகராக இயங்கியவர் நடேசன். சிவராம் படுகொலைக்குச் சில மாதங்கள் முன்னதாக மட்டக்களப்பின் வீதி ஒன்றில் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இருவரது வாழ்விலும் பணிகளிலும் சாவிலும் ஒற்றுமைகள் பலவற்றைக் காண முடியும். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
படுகொலை செய்யப்பட்ட நடேசனுக்கு ‘நாட்டுப்பற்றாளர்’ என்னும் பட்டம் வழங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம், அவரைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சிவராமுக்கு அதைவிட உயர்வானதாகக் கருதப்படுகிற ‘மாமனிதர்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது. இதனை எப்படிப் புரிந்துகொள்வது? அந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில் சிவராம் பற்றிய மதிப்பீட்டு ‘அளவுகோல்’ பெரிதாக இருந்தமைக்கான காரணங்கள் நியாயமானவையா?
பட்டங்களின் தர நிர்ணயங்கள், பட்டங்கள் வழங்கப்படுவது சார்ந்த அரசியல் உள்நோக்கங்கள், பட்டப்பெயர்கள் சார்ந்த கருத்தாக்கங்கள் போன்றவை ஆராய்ந்து நோக்கப்பட வேண்டியவை.
போராட்ட இயக்கங்களுக்குள் முரண்பாடுகளும் ‘சகோதரப் படுகொலைகள்’ என்று அறியப்படும் மிலேச்சத்தனங்களும் கோலோச்சிய எண்பதுகளின் பிற்பகுதியில், புளொட் இயக்கத்தினராலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலோ சிவராம் படுகொலை செய்யப்பட்டிருக்கூடிய சாத்தியப்பாடுகள் இருந்தன. அவர் சுழித்துக்கொண்டு எப்படியோ தப்பிப் பிழைத்தார். அப்போது அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், அவர் மீது ‘துரோகி’ என்னும் ‘இழிவாக்கம்’ செய்யப்பட்ட பட்டம் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.
பட்டப்பெயர்கள் எப்போதும் சார்பு நிலைப்பட்டவை. அவை, சார்பு நிலைப்பட்ட அணுகுமுறையைப் பொதுமைப்படுத்தும் உளவியலைக் கட்டமைக்கின்றன. எதோ ஒரு தரப்பின் அரசியல் நோக்கங்களுக்கு அமைவாகவே பட்டப்பெயர் சூட்டப்படுகிறது. ஒரு தரப்பால் இழிவானதாவோ அல்லது உயர்வானதாகவோ கருதப்படும் ஒரு விடயம், இன்னொரு தரப்பால் அவற்றின் எதிர்நிலைக் கோணங்களிலோ அர்த்தமற்றதாகவோ பார்க்கப்படக்கூடும். //
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், எப்போது தியாகச்சாவு அடைந்தார்? 2009 மே மாதம் 18 ஆம் திகதி அவரது சாவு நிகழ்ந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அதற்கு முதல் நாள் 17 ஆம் திகதி அது நிகழ்ந்ததாக வேறு சிலர் சொல்கிறார்கள். இத்தகைய கூற்றுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் மற்றும் முறையான ஆய்வுத் தகவல்கள் இல்லை. 2009 மே மாதம் 19 ஆம் திகதி (காலை), பிரபாகரன் தியாகச்சாவு அடைந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனை நான் சுயாதீனமாக ஆய்வுசெய்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். நம்பகமான ஆதாரங்களின் துணையுடன் இது பற்றிச் சிலருக்கு விரிவாக விளக்கியிருக்கிறேன்.
வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்வுகள், உண்மைகள், தகவல்கள் போன்றவற்றைத் திரிபுபடுத்தக்கூடிய, காணாமல் ஆக்கிவிடக்கூடிய செயல்களில் அறிந்தோ அறியாமலோ எவரும் ஈடுபடக்கூடாது.
மேற்கூறப்பட்ட விடயங்களையும், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ தொடர்பான எனது உரையின் இறுதியிலே சேர்த்துக்கொள்ள நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக உரையினைச் சுருக்க வேண்டியதாயிற்று.
***
வரலாறு என்பது ஒரு அறிவுத்துறை. அதனை ‘அறிவொழுக்கம்’ சார்ந்து அணுகும் என்னிடம், பாரபட்ச நிலைப்பாடுகள் இல்லை.
அடிப்படை மனித உரிமைகள் மீதான கரிசனத்துடன், மானுட வாழ்வியலின் பரிமாணங்களையும் நெருக்கடிகளையும் புரிந்துகொள்ள விழைகிறேன். சுதந்திரச் சிந்தனை (free thought) சுதந்திரப் பேச்சு (free speech) போன்ற விடுதலை வாழ்வியற் பண்புகளால் எப்போதும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள விழைகிறேன்
அமரதாஸ்
2025-04-10