பிரபாகரன் தியாகச்சாவு தொடர்பாக ஒரு நேர்காணல்

 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது தியாகச்சாவு 2009-05-19 அன்று நிகழ்ந்தது. (பல்வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆய்வு செய்து, நீண்ட காலமாக இதைச் சொல்லிவருகிறேன்.) 
 
அவரது தியாகச்சாவு நிகழ்ந்த அன்றுதான், அவருடைய இளைய மகன் பாலச்சந்திரன் சிறீலங்கா அரச படையினராற் படுகொலை செய்யப்பட்டார். (அது, மிக மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று.) 
 
பிரபாகரனது உடலில் இருந்த வரிச் சீருடை அகற்றப்பட்டு அவரை அவமதிக்கும் நோக்கில் உடல் முழுதும் சேறு பூசப்பட்டுக் காண்பிக்கப்பட்டது. அதுவும் ஒரு போர்க்குற்றம் ஆகும் என்றும் சொல்லியிருக்கிறேன்.
 
மேற்குறிப்பிட்ட முக்கியமான மூன்று விடயங்களையும், முதன்முறையாகத் தமிழ்ச்சூழலில் ஆதாரங்களோடு பேசியிருக்கிறேன். 
 
அண்மையில் வெளியான எனது நேர்காணல் ஒன்றிலும் இத்தகைய விடயங்கள் தொடர்பாகப் பேச முடிந்தது. அது பலரது கவனத்திற்கும் சென்றுள்ளது. எனினும், பிரபாகரன் தியாகச்சாவடைந்த உண்மையான திகதியை இன்னமும் சிலர் ஏற்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அத்தகையோருக்கு வெவ்வேறு உள்நோக்கங்கள் அல்லது தவறான புரிதல்கள் இருக்கக்கூடும்.
 
***
இந்த நேர்காணல் வெளியான ஊடகத் தளத்திற் பதிவாகியுள்ள பின்னூட்டங்கள் பலவும், என்னைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் நோக்கில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. தனித்தனியாக அவற்றுக்கு விளக்கம் அல்லது பதில் எழுதும் அவசியம் இல்லை.
 
எனது கருத்துகளையோ பிரபாகரன் தொடர்பான கருத்தாடல்களையோ ஆயுத ரீதியான விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளையோ சரியாகப் புரிந்துகொள்ளாத விசமிகள், எங்கிருந்தும் எப்படியும் அவதூறுகளைச் செய்வார்கள். அத்தகையவர்களால் அதிகபட்சமாகச் செய்யக்கூடியது அவதூறுகளைப் பரப்புவது மட்டுமே.
 
வரலாற்றை அறிவுபூர்வமாகவும் விமர்சனபூர்வமாகவும் அணுகியபடி அறவழியிற் பயணிக்கிற என்னை, அவதூறுகளோ அச்சுறுத்தல்களோ இடைநிறுத்தி விடாது.
 
ஊடக நடைமுறை புரியாத தமிழர்கள் சிலருக்கு, நான் எப்போதும் பிரபாகரன் என்னும் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதும் எழுதுவதும் சங்கடமாக இருக்கிறது.  
 
தமிழ்ச் சூழலில், ஊடக வெளிகளில் ஒருவரது பெயரைப் பயன்படுத்தும் முறைமை பற்றிப் பலரும் அறிந்திருப்பதில்லை. ஒருவரது பெயரைத் திரும்பத்திரும்ப எழுதவோ அல்லது பேசவோ வேண்டிய தேவை வரும்போது, என்ன செய்ய முடியும்?
 
எனது கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ‘மதிப்பு’ வழங்கப்படும். எனது கட்டுரைகளில், ஒருவரது பெயர் முதலில் வரும் இடங்களில் ‘அவர்கள்’, அல்லது ‘திரு’ இருக்கும். ஒரே பெயரைத் தொடர்ந்து பாவிக்கும்போது பெயரை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது. 
 
ஒரு கட்டுரையில் அல்லது ஊடக உரையாடலில் ஒருவரது ‘பட்டப் பெயர்’ அல்லது ‘புனை பெயர்’ அவசியமில்லை. ஒருவரைக் குறிப்பாக அடையாளப்படுத்தும் சொந்தப் பெயர் அவசியமானது. ‘பெரியார்’ என்று பொதுவாக அறியப்படுகிற நபரை, ஈ. வெ. ராமசாமி என்னும் சொந்தப் பெயரால் அடையாளப்படுத்துவது எனது வழக்கம். 
 
எவரையாவது விமர்சனபூர்வமாக அணுகும்போதும், பாரபட்சமின்றி மதிப்பார்ந்து பெயரைக் கையாளும் பண்பைக் கொண்டிருக்கிறேன். பிரபாகரனுக்கு மட்டும் விதிவிலக்கான பார்வை என்று எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப ஒருவரது பெயரைச் சுட்டுவதால் அவரது மதிப்பு ஒரு போதும் குறைந்துவிடாது. பார்க்கிறவரின் பார்வையும் மனநிலையும், சமநிலையில் இருப்பது அவசியம். ஒருவரைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியமானது; அவரது பெயர் எப்படிச் சொல்லப்படுகிறது என்பது முக்கியமானது அல்ல.
 
இது தொடர்பாகப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். (‘பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா…?’) எனது இணையத்தளத்தில் (widevisionstudio.com) அது இருக்கிறது.
 
***
இந்த நேர்காணல், பிரபாகரனது தியாகச்சாவு நிகழ்ந்த திகதி தொடர்பானது. அவரைப் பற்றியும், இறுதிப் போரை அவர் பிடிவாத நிலைப்பாடுகளோடு எதிர்கொண்டதில் நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியும் பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அவை, வேறு சந்தர்ப்பங்களிற் பேசப்பட வேண்டியவை. இந்த நேர்காணலைப் பதிவு செய்தபோது எனக்குக் கடுமையான சுகவீனம் இருந்தது. (ஏற்கெனவே இரண்டுமுறை பிற்போடப்பட்டிருந்தது.) இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் ஏற்கெனவே நான் அனுமானித்திருந்தபடி, அவலமான சூழ்நிலையில் நிகழ்ந்த மரணம் தொடர்பாக ஆராய்ந்து பேச நேர்வது, உள்ளார்ந்த துயரம் தரக்கூடியது. 
 
இயன்றவரை, பல்வேறு கோணங்களிலும் பிரபாகரனின் தியாகச்சாவு தொடர்பான சுயாதீன ஆய்வுகளை ஆதாரங்களின் துணையோடு செய்திருக்கிறேன். பாரபட்சமற்ற துல்லியமான தரவுகளைக் கண்டடைய, அவரது மரணம் சார்ந்த பல்வேறு காட்சிப் பதிவுகளையும் பல வழிகளிற் சேகரித்துப் பலமுறை ஆராந்து பார்க்கவேண்டியிருந்தது. இது, மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய செயன்முறை. எது எப்படியிருந்தாலும், ஒரு ஆய்வாளராக அறிவுபூர்வமான உரையாடலை நிகழ்த்தும்போது உணர்வுபூர்வமான தனிப்பட்ட விடயங்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.  
 
யாரோ ஒருவர் எனது நேர்காணலுக்கு வழங்கியிருந்த ஒரு பின்னூட்டம் கவனத்தை ஈர்த்தது. அதைப் பதிவுசெய்து, இப் பதிவை நிறைவுசெய்யத் தோன்றியது.
 
”தமிழ் அறிவுக் கொழுந்துகளே… இவர் சொல்வதை அறிவு கூர்ந்து கேளுங்கள். மிகத் தெளிவாகப் பகுத்தாய்ந்து சொல்கிறார். – இன்னும் மக்குக் கூட்டங்களாக இருக்காதீர்கள்.”
 
நேர்காணல் இணைப்பில் உள்ளது.
 

 

2025-05-19
அமரதாஸ்