தமிழறிஞர் வீ. பரந்தாமன்

தமிழ் அறிஞர், பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள், எல்லோருடனும் அன்பொழுகப் பேசக்கூடிய உணர்வுபூர்வமான மனிதர். ‘பகுத்தறிவு’ கொண்ட தமிழ்ப் பற்றாளர். பல்வேறு பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் ஆசிரியராகப் பணி செய்தவர்.

‘மனிதரும் கடவுளரும்’ என்னும் பெயரில் அவர் எழுதிய சிறு நூலை என்னுடன் பழகத்தொடங்கிய தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் அன்பளிப்புச் செய்திருந்தார். 1968 இல் எழுதி வெளியிடப்பட்ட நூல் அது. அப்போது நான் பிறந்திருக்கவில்லை. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. சிறுவத்தில் இருந்தே ‘கடவுள் நம்பிக்கை’ இல்லாதிருந்த எனக்கு, அவரது ‘பகுத்தறிவு’ சார்ந்த கருத்துகள் ஈர்ப்பிற்குரியவையாக இருந்தன. இலக்கியம், மொழி சார்ந்த அவரது கருத்துகள் சிலவற்றில் உடன்பட முடிந்ததில்லை என்பது வேறு விடயம்.

தமிழ் மொழியில் அவர் எனக்குப் பிரத்தியேகமான ஆசிரியராக இருந்தவர். அவரோடு பல நாட்கள் கூடியிருந்து ‘யாப்பிலக்கணம்’ கற்க முடிந்திருக்கிறது. ‘மரபுக் கவிதை’ வடிவங்களை மீறிய புதிய வடிவங்களில் நான் கவிதை எழுதத்தொடங்கியிருந்த காலத்தில், மரபுக் கவிதை இலக்கணங்களை முழுமையாகக் கற்று அறிந்திருக்க வேண்டும் என்று விரும்பியபோது, அதை அவர் பிரத்தியேக அக்கறை கொண்டு நிறைவேற்றினார்.

தமிழ் அறிஞர் கந்தமுருகேசன் (கந்தமுருகேசனார் என்று அழைக்கப்பட்டவர்.) அவர்களின் கடைசி மாணவராக இருந்த தனக்கு, நான் கடைசி மாணவராக இருப்பதாக அப்போது அவர் சொல்வார்.

அவருக்கு ‘ஹிப்னோடிசம்’ (Hypnotism) சார்ந்த விடயங்களில் ஆழமான பரிச்சயம் இருந்தது. அதனை அவரிடமிருந்து கற்க விரும்பியிருந்தேன். சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. உளவியல் சார்ந்த விடயங்களில் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை அவர் அறிந்திருந்தார். உளவளத்துணை (Counseling) சார்ந்த விடயங்களை ‘யாழ். பல்கலைக்கழகப் புறநிலைப் படிப்புகள் அலகு’ மூலம் கற்றிருந்தேன். முறைப்படி பயின்றால், என்னால் ‘ஹிப்னோடிசம்’ செய்ய முடியுமென்றும் என்னில் அதற்கான அறிகுறி தென்படுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

சங்க இலக்கியங்களில் ஆழமான புலமை கொண்டிருந்த அவர், மரபுக் கவிதை வடிவங்களை உள்வாங்கிப் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றைக் கொண்ட ‘தமிழ் நடந்த தடங்கள்’ என்னும் நூல் 1995 இல் வெளிவந்தது. வி. பு. இயக்கம் உருவாக்கிய இசைப் பாடல்கள் சிலவற்றுக்கான பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

‘கெரில்லாப் போர் விரகுகள்’ (1996), ‘பண்டைக் குமரியும் பழங்குடித் தமிழரும்’ (2001), ‘திருக்குறளில் செந்தமிழாட்சி’ (2005), ‘வேரடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி’ (2004), ‘அருகிவரும் பழந்தமிழ்ப் பேச்சுவழக்கு சொற்பிறப்பியல் அகராதி ‘அ’ மட்டும்’ (2008), ‘தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி’ (2016) போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவர், திரு. யோகரத்தினம் யோகி, திரு. மகேந்திரராசா மாத்தையா, திரு. புதுவை இரத்தினதுரை, திரு. தமிழேந்தி, திரு. பேபி சுப்பிரமணியம், திரு. பாலகுமாரன் போன்றவர்களை அடிக்கடி சந்திக்கக்கூடியவராக இருந்தார். வி. பு. இயக்கத்தின் ‘நிழல் அரசு’ உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அப்போதெல்லாம் அவரை வாரத்தில் ஒருமுறையாவது சந்திக்க முடிந்திருக்கிறது.

“கொந்துமணித் தேர்வேண்டேன்
கோமகனே உன்னிடத்தில்
கந்துகடா களிறும் யான் வேண்டேன்
முன் நீ அழைத்தால்
வந்துசெல்ல வளமாக
மனமகிழ்ந்தே ஒரு சிறிய
உந்துருளி தந்துதவ
வல்லையோ உடன்பிறப்பே”

என்று ஒரு தாளில் எழுதி, புதுவை இரத்தினதுரையிடம் அவர் கொடுத்திருந்தார். அதைப் பார்த்த வி. பு. இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், அவருக்கு ஒரு சிறிய வாகனத்தை வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ‘சாளி’ என்று அழைக்கப்பட்ட ‘மோட்டார் சைக்கிள்’ அது. சிவப்பு நிறத்தில் இருந்த அதற்கு, ‘செம்பவளவல்லி’ என்று பெயர் வைத்திருந்தார் பரந்தாமன். அப்போது கோண்டாவில் என்னும் இடத்தில், புதுவை இரத்தினதுரையின் பொறுப்பில் இருந்த கலை பண்பாட்டுக் கழகச் செயலகத்திற்கு அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தது ‘செம்பவளவல்லி’. ‘மோட்டார் சைக்கிள்’ என்னும் பெயர்ச்சொல் ‘உந்துருளி’ என்னும் தமிழ்ப்பெயராக அப்போது மாற்றம் பெறக் காரணமாக இருந்தார் பரந்தாமன்.

இலங்கையின் இறுதிப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது, நான் ஒளிப்படங்களை உருவாக்கிக்கொண்டிருந்த நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில் அவரைக் காண முடிந்தது. (அப்போது உருவாக்கப்பட்ட ஒரு ஒளிப்படத்தில் அவரும் உள்ளடங்கியிருக்கிறார்.) அப்போது, வி. பு. இயக்கத்தில் இருந்த அந்தணன் என்னும் அவரது மகனின் (இயக்கப் பெயர்: இளம்பருதி) நினைவுகள் அவரை வருத்திக்கொண்டிருந்தன.

அப்போது, ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளின் நடைமுறைத் தவறுகள் குறித்தும் வி. பு. இயக்கத் தலைமையின் விபரீதமான முடிவுகள் குறித்தும் எனது நண்பர்களுக்குச் சொல்பவற்றை அவருக்கும் சொல்லியிருக்கிறேன். மௌனமாக இருந்து ஆமோதித்தார். அவர் எப்போதும் விடுதலைப் போராட்டத்தை விமர்சனபூர்வமாக அணுகியதில்லை.

இறுதிப் போர் முடிவில், சரணடைந்த வி. பு. இயக்கப் போராளிகள் பலர், சிறீலங்கா அரச படையினராற் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, நிர்வாணப்படுத்திக் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலே சுட்டுக்கொல்லப்படுவதற்காக இருத்திவைக்கப்பட்டிருந்த பல போராளிகள் மத்தியில் அவரது மகன் அந்தணன் இருப்பதை, சிறீலங்கா இராணுவத்தினர் பதிவுசெய்திருக்கும் படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அத்தகைய படங்களின் ‘டிஜிற்றல்’ மூலப்பிரதிகளை ஆய்வு நோக்கங்களுக்காகச் சேகரித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

இறுதிப் போர் முடிந்த பின்னர், கிளிநொச்சியில் சௌந்தரராசா (K S R) அவர்களின் முயற்சியோடு ‘பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக் கல்லூரி’ ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு வந்திருந்தார்.
மகனின் இழப்பும், மகனின் இறுதி நேர அவல நிலைமையும் அவருக்கு எத்தகைய துயரத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது என்பதைப் பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.

அண்மையில், அவருடன் இறுதிவரை நெருக்கமாக இருந்த முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினர் (பெண் போராளி) ஒருவர் மூலம் அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றிருந்தேன். எனினும் அவரோடு விரிவாக எதையும் உரையாட முடியவில்லை. 1942 ஆம் ஆண்டிற் பிறந்த அவர், மூப்பின் காரணமாக மிகவும் தளர்ந்துபோயிருந்தார். தனது ஊரில் ‘மாமறவர் மணிமண்டபம்’ என்னும் பெயரில் ஒரு நூலகம் அமைத்து, அங்கேயே அதிக நேரம் செலவிட்டார்.

இந்த ஒளிப்படத்தை உருவாக்கி, ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு அனுப்பியிருந்த முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினருக்கு (பெண் போராளி) நன்றி. – அமரதாஸ்

 

இன்று (2025-06-14) அவர் மறைந்துவிட்டார். உண்மையிலேயே தமிழ்ச் சூழலிற் பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. 

தற்போது நான் தொடர்ச்சியான பயணத்தில் இருப்பதால், அவரைப் பற்றி உடனடியாக விரிவாக எழுத முடியவில்லை. இன்னமும் எழுதலாம்.

2025-06-14
அமரதாஸ்