உயிர்த்தியாகிகளை நினைவுகூர்தல்: விரிவாக்க விடுதலைச் சிந்தனைக்கான முன்வரைவு

 
தமிழீழ விடுதலையின் பெயரால் வெவ்வேறு போராட்ட அமைப்புகளில் இருந்து ‘தியாகச்சாவு’ அடைந்த அனைவரும், பாரபட்சமின்றி ஏதாவது ஒரு நாளில் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். (வெவ்வேறு சந்தர்பங்களிற் சாவடைந்த, வெவ்வேறு தரப்பினராலும் கொல்லப்பட்ட ‘விடுதலை அரசியல்’ சார் செயற்பாட்டாளர்கள் எல்லோரையும் அடையாளப்படுத்தக்கூடிய செறிவான அர்த்த பரிமாணங்களுடன்   ‘தியாகச்சாவு’ எனும் சொல்லாடல் இங்கு பிரயோகிக்கப்படுகிறது.)
 
‘தேசிய மாவீரர் நாள்’ என்று இப்போது அழைக்கப்படுகிற, வருடாந்தம் முன்னெடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்த ‘மாவீரர் நாள்’ (நவம்பர் 27) அன்று, தியாகச்சாவு அடைந்த எல்லோருக்குமான பொது நினைவுகூரல் நிகழ்த்தப்படுவது பொருத்தமானது. அது, ‘விடுதலை அரசியல்’ சார் அறத்தின் அடிப்படையிலும் தமிழ்த் தேசிய அசைவியக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படக்கூடியது.
 
இதன் அவசியத்தையும் நடைமுறைச் சாத்தியங்களையும் தெளிவுபடுத்தும் வகையில் விரிவாகப் பிறகு எழுத வேண்டும். இது பற்றி வெவ்வேறு இடங்களிற் பேசிவந்திருக்கிறேன். ‘தியாகச் சாவடைந்தோருக்கு அஞ்சலி’ என்னும் தலைப்பில் நவம்பர் 27 அன்று எழுதப்பட்ட முன்னோட்டக் கட்டுரை ஒன்று, widevisionstudio.com இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முகநூலில் அது பகிரப்பட்டிருக்கிறது.
 
வி. பு. இயக்கம் சாராத, வேறு சில இயக்கங்களைச் சார்ந்த உயிர்த்தியாகிகள் வெவ்வேறு நாட்களில் நினைவுகூரப்படும் நடைமுறை உள்ளது என்பதும், அனைத்து இயக்கங்களின் உயிர்த்தியாகிகளும் பொதுவாக நினைவுகூரப்படுவதில்லை என்பதும்  கவனிக்கப்பட வேண்டும். 
 
விடுதலையின் பெயரால் ஈழத்தமிழர் மத்தியில் இயக்கங்கள் பல ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எல்லா இயக்கங்களின் வழியாகவும் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்கள், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கணிசமாக வாழ்கிறார்கள். தமிழ்த் தேசியம், விடுதலைப் போராட்டம் அவர்களுக்குமானது. அத்தகையவர்களைப் புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகள் எவையும் நியாயமான, முற்போக்கான தமிழ்த் தேசிய முன்னெடுப்புகளாக அமைய முடியாது.  
 
கடந்த காலத்தில் அனைத்து இயக்கங்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக அர்ப்பணிப்புகளையும் உயிர்த்தியாகங்களையும் வரலாற்றுத் தவறுகளையும் செய்திருக்கின்றன. இயக்கங்களின் தலைவர்களது தவறான வழிநடத்தல்களும் இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் இயக்கங்களுக்குள் நடந்த உள் முரண்பாடுகளும் புறவயமான பல்வேறு காரணிகளும், பலவகையான பின்னடைவுகளுக்கும் ‘துன்பியல்’ நிகழ்வுகளுக்கும் பின்னணிகளாக அமைந்திருக்கின்றன. 
 
இத்தகைய பின்னணிகளில், எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு தரப்புகளாக இருப்பவர்களும் மாறுபட்ட நோக்குநிலைகளில் இருந்து சிந்திக்கக்கூடும்; முரண்படக்கூடிய கருத்துவெளிப்பாடுகளைச் செய்யக்கூடும். 
 
மாற்றுக் கருத்துகளைக் கொண்டிருக்கும் ஒரு தரப்பின் மீது, கண்மூடித்தனமாகவும் மோசமான உள்நோக்கங்களோடும் இன்னொரு தரப்பு ‘துரோகிப் பட்டம்’ சுமத்த முனைகிற இழிசெயல்கள் தமிழ்ச்சூழலில் அவ்வப்போது நடைபெறுகின்றன. 
 
‘துரோகம்’ மற்றும் ‘தியாகம்’ போன்ற சொல்லாடல்கள் சார்புநிலைப்படுத்தக்கூடியவை; பார்வைக்கோண மாறுபாடுகளுக்கு அமைவாக இடம் மாற்றிப் பிரயோகிக்கப்படக்கூடியவை. 
 
‘துரோகி’ என்று ஒரு தரப்பினராற் கருதப்படக்கூடிய ஒருவர், எல்லாத் தரப்பினராலும் ‘துரோகி’ என்றே கருதப்படுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
 
‘தீண்டாமை’ மனோபாவத்தோடும் பாரபட்சமாகவும் வரலாற்றுப் பார்வைக் கோளாறுகளோடும் அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் இருந்தும் இத்தகைய விடயங்களை அணுக முடியாது. 
 
‘தமிழ்த் தேசியம்’ எனப்படுவது கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறையிலும் சனநாயக அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் அது தேசிய அடிப்படைவாதம் ஆகிவிடும்.
 
விடுதலைப் போராட்டம் அனைத்து ஈழத்தமிழருக்குமானது. போராட்டப் பயணத்தில் அர்ப்பணிப்புகளோடு இணைந்திருந்து தியாகச்சாவடைந்த எல்லோரையும் நினைவுகூர்வது, ஈழத்தமிழ்ச் சமூகத்தின் தார்மீக உரிமையும் கடமையும் ஆகும்.
 
விடுதலைச் சிந்தனை கொண்டவர்கள், தவிர்க்கமுடியாத தேவைகளின்போது அற வழிமுறைகளில் ‘எதிர்ப்பரசியல்’ செய்கிறவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்களால் கண்மூடித்தனமாக ‘வெறுப்பரசியல்’ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. 
 
போராட்ட வரலாற்றை நேரடியாக அறிந்த, அதனைப் பாரபட்சமின்றி அணுகக்கூடிய, விடுதலைச் சிந்தனை கொண்ட எவரும் இத்தகைய விடயங்களைப் புரிந்துகொள்வர்.
 
2024-11-28
அமரதாஸ்