பிரபாகரன் மீதான அஞ்சலி: நிகழ்வுகளும் வரலாற்றுத் திரிபுவாதங்களும்

 
பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கான ‘திரள்நிலை’ அஞ்சலி (வீரவணக்கம்) நிகழ்வை 2024 இல் டென்மார்க் நாட்டில் நடாத்தினார்கள். அவரது மனைவிக்கும் மூன்று பிள்ளைகளுக்குமான அஞ்சலி நிகழ்வாகவும் அது அமைந்திருந்தது.
 
பிரபாகரனின் அண்ணன் திரு. வேலுப்பிள்ளை மனோகரன் மற்றும் அவரது மகன் திரு. மனோகரன் கார்த்திக் போன்றவர்களின் முக்கியமான பங்களிப்போடு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினர்கள், அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள், ஊடகர்கள் உட்படப் பொது மக்கள் பலரும் பல நாடுகளில் வசிப்பவர்களும் கலந்துகொண்டனர். அதுவே பிரபாகரனுக்கான முதலாவது திரள்நிலை அஞ்சலி நிகழ்வு. அதனை வீரவணக்க நிகழ்வு என்றோ நினைவேந்தல் நிகழ்வு என்றோ குறிப்பிடலாம். 
 
அந்த நிகழ்வு பற்றி, ஏற்கெனவே ‘ஐவர் கொண்ட குடும்பத்திற்கு அஞ்சலி’ என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அக் கட்டுரை widevisionstudio.com இணையத்தளத்தில் உள்ளது.
 
2009-05-19 அன்று பிரபாகரன் தியாகச்சாவு அடைந்திருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களும் நம்பகமான சுயாதீன ஆய்வுத் தகவல்களும் என்னிடம் இருக்கின்றன. இது பற்றியும் பொதுவெளியில் விரிவாக எழுதியும் உரையாடியும் வந்திருக்கிறேன். 
 
முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினர்கள் சிலர் இப்போது ஒருங்கிணைந்து, 2009-05-18 அன்று பிரபாகரன் சாவடைந்திருப்பதாகவும் அவருக்கான அஞ்சலி (வீரவணக்கம்) நிகழ்வை 2025-08-02 அன்று நடாத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். 
 
இரண்டு தவறுகளை அவர்கள் செய்கிறார்கள். ஒன்று, 2025 எட்டாம் மாதத்தில் அவர்களால் நடாத்தப்படவுள்ள நிகழ்வையே பிரபாகரனுக்கான முதலாவது திரள்நிலை அஞ்சலி (வீரவணக்கம்) நிகழ்வாகச் சித்தரிக்க முற்படுவது. இன்னொன்று, பிரபாகரன் சாவடைந்த சரியான காலத்தை (திகதி) மாற்றியமைத்து, 2009-05-18 அன்று அவர் சாவடைந்ததாகத் தவறான தகவலைப் பரப்புவது.
 
வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையிலோ சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலோ, சமூக ஊடகத் தளங்களில் அவர்கள் பேசுவதும் செயற்படுவதும் ஆரோக்கியமானவை அல்ல. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இரண்டு தவறுகளையும் அவர்கள் திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். 
  
குழுநிலையிலும் தனியாகவும் பலர் பிரபாகரனுக்கு அஞ்சலி (வீரவணக்கம்) செலுத்திவந்த நிலையில், அவருக்கான முதலாவது திரள்நிலை அஞ்சலி நிகழ்வு டென்மார்க் நாட்டில் 2024 இல் நடாத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இனி நடாத்தப்படக்கூடிய நிகழ்வை முதல் நிகழ்வாக மடைமாற்றிக் காண்பிக்கும் நோக்கத்துடன் சொல்லப்படக்கூடிய காரணங்கள் நியாயமானவையாக இருக்காது. வீரவணக்கம், நினைவேந்தல் போன்ற சொற்பிரயோகங்கள் கொண்டு அடையாளப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அடிப்படையில் அஞ்சலி நினைவுகளே ஆகும்.
 
பிரபாகரன் தியாகச்சாவு அடைந்த திகதி தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எந்த அமைப்புகளையும் தனிநபர்களையும் கருத்தியல்களையும் சாராதிருந்து சுயாதீன ஆய்வுகளை மேற்கொண்டு, 2009 மே மாதம் 19 ஆம் திகதி அன்று பிரபாகரனின் தியாகச்சாவு நிகழ்ந்தது என்னும் வரலாற்று உண்மையைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறேன். இந்த உண்மை சார்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களிற் பேசிவந்திருக்கிறேன். எனது ஆய்வு முடிவுகளை மாற்றியமைக்கக்கூடிய நம்பகமான ஆதாரங்கள் எவரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி இருப்பதாக யாராவது கருதினால், அவற்றை எனக்கு வழங்கினால், அவற்றையும் ஒருங்கிணைத்து முன்முடிவுகள் இன்றி எனது ஆய்வுகளைத் தொடரக்கூடிய பக்குவம் எனக்கு உண்டு. இப்போது என்னிடம் இருக்கும் ஆதாரங்களும் ஆய்வுத் தகவல்களும் மிகப் பலமானவை; நம்பகத்தன்மை கொண்டவை. எனது சுயாதீன ஆய்வுக்கு, உண்மையைக் கண்டடையும் ஒரே நோக்கம் மட்டுமே உள்ளது.
 
இரண்டு வருடங்களாக ஆய்வுசெய்து, பிரபாகரனின் சாவு 2009-05-18 அன்று நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ஆய்வு அறிக்கையினை ஆதாரங்களுடன் வெளியிடப்போவதாகவும் எட்டாம் மாத அஞ்சலி நிகழ்வை நடாத்தவிருக்கும் தரப்பினர் அறிவித்திருக்கிறார்கள். சொன்னபடி, எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. அந்த நிகழ்வு நடைபெற முன்னதாகவே குறிப்பிட்ட ஆய்வு அறிக்கை வெளிவருமா என்று தெரியவில்லை. 
 
பிரபாகரன் சாவடைந்த உண்மையான திகதியை மறைத்து, போலித் திகதி ஒன்றை மாற்றீடு செய்ய முயலும் கதையாடல்களை (narrative) முன்னெடுப்பது, வரலாற்றுத் திரிபுவாதம் ஆகும். மட்டுமல்ல, அது பிரபாகரனுக்கு இழைக்கப்படும் அநீதியும் ஆகும். 
 
வரலாற்றை வாக்களித்துத் தீர்மானிக்க முடியாது. ஆதாரங்கள் மற்றும் துல்லியமான தரவுகள் போன்ற கூறுகளோடு தோற்றங்கொள்ளும் வரலாற்றை, விருப்பு வெறுப்புகளுக்கும் சுயநல அரசியல் உள்நோக்கங்களுக்கும் அமைவாக எவரும் திரித்துவிட முடியாது. 
 
பல்வேறு தரப்பினரும் டென்மார்க் நாட்டில் 2024-05-18 அன்று கூடிநின்று பிரபாகரனின் தியாகச்சாவை அறிவித்து அஞ்சலி (வீரவணக்கம்) செய்தபோது, அவர்களுக்கும் அவரது சாவுத் திகதி சரியாகத் தெரிந்திருக்கவில்லை. எனினும், திரள்நிலை நிகழ்வாக அவருக்கான அஞ்சலி நிகழ்வை அப்போது நடாத்தியிருந்தர்கள். இனி, 2025 எட்டாம் மாதத்தில் அது போன்ற ஒரு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட அவசியம் இருக்கிறதா?  
 
எது எப்படியிருந்தாலும், இனிவரும் காலத்தில் வி. பு. இயக்கம் சார்ந்தோருக்கான ‘மாவீரர் நாள்’ (நவம்பர் 27) நிகழ்வுகளிலோ அல்லது பிரபாகரன் தியாகச்சாவு அடைந்த சரியான திகதியிலோ (மே 19) அவருக்கான அஞ்சலி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியதே அவசியமானது. 
 
பல்வேறு நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை வருடாந்தம் முன்னெடுக்கும் அமைப்புகள், பிரபாகரன் மற்றும் அவரது மகள் துவாரகா போன்ற உயிர்த் தியாகிகளுக்கு அந்த நாளிலே அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை இதுவரை உருவாக்கவில்லை. ஒருவகை நூதன மோசடி என்றே இதனைக் குறிப்பிடலாம். முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினர்கள் இணைந்து முன்னெடுக்கும் பிரபாகரனுக்கான அஞ்சலி நிகழ்விற்கு, தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று சொல்லக்கூடிய அறத் தகைமை இத்தகைய அமைப்புகளுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. 
 
அனைத்துப் பொது நிகழ்வுகளும் செயற்பாடுகளும் எப்போது, எப்படி, எத்தகைய பின்னணியில், யாரால், ஏன் செய்யப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்கப்படுவது அவசியம். பொது நிகழ்வு அல்லது பொதுச் செயற்பாடு ஒன்றின் நுண்ணரசியல் புரிந்துகொள்ளப்பட வேண்டியது. புலனாய்வுக் கட்டமைப்புகளும் அரசியல் உள்நோக்கம் கொண்ட தரப்புகளும், மறைமுகமாக இருந்து புதிய நிகழ்வுகளை ஒழுங்குசெய்யவோ ஏனையோரின் நிகழ்வுகளைச் சதித் திட்டங்களோடு பயன்படுத்திக்கொள்ளவோ முயற்சிக்கக்கூடும்.
 
விடுதலையின் பெயரால் தியாகச்சாவு அடைந்தோருக்கான அஞ்சலி நிகழ்வுகளை யாரும் செய்ய முடியும். அவை, சுயநல அடையாள அரசியல் நலன்களின் அடிப்படையிலான வழிபாட்டு நிகழ்வுகளாகவோ வரலாற்றைத் திரிபுபடுத்தக்கூடிய நூதன மோசடிச் செயற்பாடுகளாகவோ அமைந்துவிடக் கூடாது. 
 
ஒரு சமூகத்திலே பல்லாயிரக்கணக்கான உயிர்த் தியாகங்கள் நிகழ்ந்திருக்கும் நிலையில், மிகச் சில உயிர்த் தியாகங்களை மாத்திரம் முதன்மைப்படுத்தி, ஏனையவற்றை மறைமுகமாக மலினப்படுத்திவிடக் கூடாது. உயிர்த் தியாகங்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. 
 
தெளிவான நிலைப்பாடுகள், பொறுப்புக்கூறல் ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை, அரசியல் சரித்தன்மை (political correctness) போன்றவற்றைக் கொண்டிராத அமைப்புகளின் போலிச் செயற்பாடுகளை இனங்காணக்கூடிய விழிப்புணர்வைத் தமிழ் மக்கள் பெற வேண்டும்.
 
விடுதலையின் பெயராலே தியாகச்சாவு அடைந்துவிட்ட பிரபாகரன் சார்ந்த ‘பிம்பக் கட்டுமானங்கள்’ மற்றும் அவர் தலைமை தாங்கிய வி. பு. இயக்கத்தின் அடையாளங்கள் போன்றவை யாருக்கு ஏன் தேவைப்படுகின்றன என்று தமிழ்ச் சமூகத்தினர் சிந்திக்க வேண்டும். 
 
வருடாந்தம் மே 18 ஆம் திகதியை ஈழத்தமிழருக்கான இன அழிப்பு நினைவு நாளாகப் பெரும்பான்மைத் தமிழர்கள் கடைப்பிடிக்கிறார்கள். (இன அழிப்பு நினைவு நாளாக, வேறு பொருத்தமான நாள் அமைக்கப்படலாம் என்பதும் மே 20 ஆம் திகதி அதற்குப் பொருத்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது தனியாகப் பேசப்பட வேண்டியது.) பிரபாகரனின் தியாகச்சாவு இந்த நாளில் (மே 18) நடந்திருக்காதபோது, இதே நாளில் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பது பொருத்தமாக இருக்காது. இந்த நாளுக்கான இன ரீதியான முக்கியத்துவத்தைக் கீழிறக்கும் வகையில் அது அமைந்துவிடக்கூடும். ஒரே நாளில் வெவ்வேறு நிகழ்வுகள் செய்யப்படுமாயின், மக்களது பங்கேற்பும் நிகழ்வுகள் சார் கவனக் குவிப்பும் சிதறடிக்கப்படலாம்.
 
பிரபாகரனும், அவரது மகளும் (துவாரகா) மனைவியும் உயிருடன் இருப்பதாகப் பொய் சொல்லி மோசடிகளில் ஈடுபடும் கும்பலுக்கும் 2025 எட்டாம் மாதம் பிரபாகரனுக்கு அஞ்சலி நிகழ்வு செய்ய முற்படும் தரப்பினரைச் சேர்ந்த சிலருக்கும், முன்னர் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மோசடிக் கும்பல் தொடர்பான சர்ச்சைகள் தீவிரமாகிப் பல்வேறு முக்கிய தகவல்களைச் சிலர் அம்பலப்படுத்திய பின்னர், மோசடிக் கும்பலோடு தொடர்புபட்டிருந்த சிலரின் வாக்குமூலங்கள் வெளிவந்தன. உண்மைகளை அறிவதற்காகவே அந்த மோசடிக் கும்பலுடன் இணைந்து செயற்பட்டதாகச் சிலர் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கியிருக்கிறார்கள். எனினும், மோசடிக் கும்பல் தொடர்பான போதிய ஆதாரங்களும் முழுமையான அல்லது அடிப்படையான பின்னணித் தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை என்று கருதப்படுகிறது. அந்தக் கும்பலின் மோசடிச் செயற்பாடுகள் இன்னமும் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய பின்னணியில், நேர்மறையாகத் தம்மை அடையாளப்படுத்தும் வகையிலே எட்டாம் மாத வீரவணக்க நிகழ்வைச் சிலர் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்களோ என்னும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
 
இலங்கை இறுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் ‘இயக்க மரபு’ சார்ந்து தற்கொலை செய்துகொள்ளாமல், பிரபாகரனை விட்டு ஓடித்தப்பி எதிரிகளிடம் சரணடைந்தார்கள் என்று முன்னாள் வி. பு. இயக்க உறுப்பினர்கள் சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்காக, பிரபாகரன் சாவடைந்த பின்னரே சரணடைவுச் சம்பவங்கள் வேறு வழியின்றி நிகழ்ந்ததாகச் சித்தரிப்பதற்காக, பிரபாகரனின் சாவுத் திகதியை ஒரு தரப்பினர் 18 என்றும் இன்னொரு தரப்பினர் 17 என்றும் மாற்றிக் காண்பிக்க முயல்கிறார்களா என்னும் சந்தேகம் பலருக்கு எழத்தொடங்கியிருக்கிறது.
 
பிரபாகரனின் தியாகச்சாவு 2009-05-19 அன்று நிகழ்வதற்கு முன்னதாகவே, இப்போது இருக்கும் முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பலர் சரணடைந்து விட்டார்கள் என்னும் யதார்த்தம் மறுக்கப்பட முடியாதது. அனைத்து நம்பிக்கைகளும் தோற்றுப்போன நிலையிலே, பேரழிவுகளுக்கும் வீணான உயிர்த்தியாகங்களுக்கும் மத்தியிலே சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட சரணடைவு முயற்சிகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. (வி. பு. இயக்கம் சார்ந்தவர்களின் சரணடைவு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறீலங்கா அரச தரப்பினர் மேற்கொண்ட மோசமான படுகொலைகள், போர்க்குற்றங்கள் சார்ந்த விடயங்கள் தனியாகப் பேசப்பட வேண்டியவை.)
 
பகுத்தறிவற்ற அதிதீவிர இலட்சியவாதம் சார்ந்தும் உள்நோக்கங்களின் அடிப்படையிலும் வி. பு. இயக்க உறுப்பினர்களின் சரணடைவு முயற்சிகள் தொடர்பிலே காட்டமான கருத்துகள் முன்வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இலங்கை இறுதிப் போரின் ஆபத்தான நிலைமைகள் தொடர்பான புரிதலைக் கொண்டிராத இத்தகைய கருத்துகள் ஏற்புடையவை அல்ல. 
 
அதிதீவிர இலட்சியவாதம் சார்ந்த முட்டாள்தனம் எதுவும் ஆதரிக்கப்பட முடியாதது; ஆபத்தானது. விடுதலையின் பெயரால், வீணான உயிர்த்தியாகங்களை வலிந்து தூண்டிச் செயற்படுத்துவதும் அத்தகைய உயிர்த்தியாகங்களைத் திரிபுபடுத்தி (manipulate) அதீதமாக மகிமைப்படுத்துவதும் (glorifying) மனிதாபிமானம் கடந்த அநாகரிகச் செயல்கள் ஆகும். 
 
*** 
2009 மே 19 அன்று காலையிலே தன் தியாகச்சாவைத் தேர்ந்துகொண்ட பிரபாகரன், அதற்கு முதல் நாள் வரையான உயிரிழப்புகளை அறிந்திருப்பார். தனது மகள், மூத்த மகன் மற்றும் மனைவி ஆகியோரின் உயிரிழப்புகளை அறிந்திருந்த அவரது மனம், எப்படிக் கலங்கித் தவித்திருக்கும்? தனது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை அவர் அறிந்திருக்க நியாயமில்லை. அவரது சாவை 2009-05-19 அன்று உறுதிப்படுத்திய பின்னரே, பாலச்சந்திரன் படுகொலையினை அரச (சிறீலங்கா) படையினர் நிகழ்த்தியிருக்கக்கூடும். பிரபாகரன் சாவும் பாலச்சந்திரன் படுகொலையும் ஒரே நாளில் (2009-05-19) நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
 
தனக்குச் சரியாகத் தோன்றியவற்றையும் தன்னால் இயன்றவற்றையும், இறுதிவரை பிரபாகரன் செய்தார். விடுதலையின் பெயராலே தியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்து தியாகச்சாவு அடைந்துவிட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் அவரும் ஒருவர். சில சொந்தத் தவறுகள் சார்ந்த குற்றவுணர்ச்சியை அவர் கொண்டிருந்தார் என்பது, அவரோடு நெருங்கிப் பழகியோரும் அவரது உளவியலைப் புரிந்தோரும் மட்டுமே அறிந்த அந்தரங்க உண்மை. அவர் சார்ந்த அறியப்படாத உண்மைகள் பல இருக்கின்றன.
 
எது எப்படியிருந்தாலும், பிரபாகரன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. பலரது அர்ப்பணிப்புகளாலும் உயிர்த் தியாகங்களாலும் வளர்ச்சியடைந்திருந்த, சில காரணங்களால் அழிக்கப்படக்கூடிய ஆபத்தைக் கொண்டிருந்த ஆயுதப் போராட்ட இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய அவரது பிடிவாத நிலைப்பாடுகளும் பொறுப்புணர்வற்ற சில நடவடிக்கைகளும், பின்னடைவுகளோடு பேரழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மோசமான எதிர் விளைவுகள் (backfire) தரக்கூடிய கொலைகள் சிலவற்றுக்கும் வீணான தியாகச்சாவுகள் பலவற்றுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் செயற்படுத்திய ‘துன்பியல்’ நிகழ்வுகள் சிலவற்றை அறிந்தவர்கள் இப்போது இல்லாமலில்லை.
 
மக்களையும் போராளிகளையும் போராட்ட இயக்கத்தையும் பாதுகாக்கும் வகையில், இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் அவ்வப்போது முன்வைக்கப்பட்ட திட்ட ஆலோசனைகளை அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ‘பெக்கன் திட்டம்’ (Project Beacon) கொண்டிருந்த ஆபத்துகள் பற்றியும் அப்போது அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளிலே தொடர்புபட்டிருந்த திரு. யோகரத்தினம் யோகி, திரு. க. வே. பாலகுமாரன் போன்ற சிலர் இப்போது இல்லை. இப்போதும் இருக்கக்கூடிய மிகச் சிலர், இது பற்றி எப்போதாவது விரிவாகப் பேசக்கூடும். 
 
***
விடுதலைப் போராட்ட வரலாறு சார்ந்த சரியான புரிதலோ பிரபாகரனை ‘மறுவாசிப்பு’ செய்யக்கூடிய பக்குவமோ மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டடையக்கூடிய நெஞ்சுரமோ கொண்டிராதோரின் ‘மந்தை மனோபாவம்’, விடுதலை அரசியல் சார் சுய சிந்தனைகளுக்கு இட்டுச்செல்லாது. மந்தை மனோபாவம் கொண்டோரின் செயல்வாதம் போலித்தனமானது; ஆபத்தானது.
 
வி. பு. இயக்கம் சார்ந்த அடையாளங்களையும் பிரபாகரன் சார்ந்த கதையாடல்களையும் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தக்கூடிய அரசியல்வாதிகளிடமோ, வி. பு. இயக்கத்தின் உப அமைப்புகளின் பெயரால் அவ்வப்போது கோணங்கித்தனமாக அறிக்கை ஏவக்கூடிய நபர்களிடமோ, வி. பு. இயக்கம் சார்ந்த ஆதரவுச் சக்திகளை மடைமாற்றக்கூடிய தரகர்களாக மந்தை மனோபாவம் கொண்ட சிலர் மாறிவிடக்கூடும்.
 
இப்போதைய நிலையில், வி. பு. இயக்கத்தின் தொடர்ச்சியாக எதனையும் அடையாளப்படுத்த முனைவது ஆபத்தானது. இது விரிவாகப் பேசப்பட வேண்டிய விடயம். ‘துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி…’ என்னும் தலைப்பில் ஏற்கெனவே நான் எழுதியிருக்கும் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். (widevisionstudio.com இணையத்தளத்தில் இருக்கிறது.) 
 
// விமர்சனங்களுக்கு அப்பால், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதிலும் விடுதலை அரசியலை முன் நகர்த்துவதிலும் பிரபாகரன் கொண்டிருந்த பங்கு முக்கியமானது. அவருடன் அனைத்தையும் தேக்கி உறைய வைத்துவிட முடியாது. அவரை நினைவுகூரலாம்; அஞ்சலிக்கலாம். அவரது வாழ்விலும் சாவிலும் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விடுதலை அரசியல், அவரையும் கடந்து ஆரோக்கியமான வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டியது.
 
முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம். சர்வதேச மட்டங்களிலே சட்ட ரீதியான சிக்கல்களும் கருத்தியல் மாறுபாடுகளும் நிறைந்திருக்கும் நிலையில், ராஜதந்திர அடிப்படைகளுடன் ஒருங்கிணைந்து பூகோள அரசியல் நிலைமைகளைக் கணக்கிலெடுத்து விடுதலை அரசியல் வழியில் அறம் பிழைக்காமற் செயற்படுவது அவசியம்.
 
தெளிவான நிலைப்பாடுகள், சனநாயக அடிப்படைகள், மனித உரிமைகள் மீதான உறுதிப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஒழுக்கம் போன்றவை, எத்தகைய பொதுச் செயற்பாடுகளுக்கும் அவசியமானவை.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடையாளங்களையும் பிரபாகரன் போன்ற போராளிகளின் பெயர்களையும் தமது அடையாள அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த விழைவோர், தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 
இலங்கை இறுதிப் போரில் நிகழ்ந்திருக்கும் ஆயுதப் போராட்டத் தோல்வி மற்றும் பேரழிவுகள் போன்றவற்றில், இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் சர்வதேச அரசுகளும் கொண்டிருந்த தொடர்புகள் சார்ந்த பகுப்பாய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றின் வழியாகப் புதிய சிந்தனைகளும் செயற்பாட்டுத் தளங்களும் விரிவடைய முடியும். ‘முள்ளிவாய்க்கால் முடிவு’ தரக்கூடிய படிப்பினைகளைத் தமிழ்ச் சமூகம் உள்வாங்கிக்கொள்வதும் சனநாயக அடிப்படைகளுடன் விடுதலை அரசியல் சார்ந்து முன் நகர்வதும் அவசியம். //
 
***
ஈழத் தமிழரின் விடுதலை அரசியல் சார் செல்நெறியில், வி. பு. இயக்கம் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. அதன் வீழ்ச்சிக்குப் பல்வேறு புறக்காரணிகளும் அகக் காரணிகளும் இருந்திருக்கின்றன. அந்த இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளும் வரலாற்றுத் தவறுகளும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. அந்த இயக்கத்தை, அதன் பண்புகளோடு எவராலும் இன்றைய நிலையில் உயிர்ப்பிக்க முடியாது. அது உயிர்ப்புடன் இருப்பதாகச் சித்தரிக்க முற்படும் செயல்கள் ஆபத்தானவை. அவை, பலவிதமான குளறுபடிகளையும் மோசமான பின்விளைவுகளையும் பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தும்.  
 
விடுதலை அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள், சனநாயகப் பண்புகளோடும் வரலாற்றுப் புரிதலோடும் ஆரோக்கியமான புதிய வழிமுறைகளில் இணைந்து செயற்பட வேண்டும். பழைய கசடுகளையும் புதிய பசப்பு வார்த்தைகளையும் ஏந்தியபடி வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரக்கூடிய எவரையும், விழிப்புணர்வுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும். 
  
சார்புத்தன்மைகளாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளாலும் ஈழப் போராட்ட வரலாறு ஊழல் (corruption) மிக்கதாக மாற்றப்படக் கூடாது. நேரடி அனுபவங்களோடும் வரலாற்றுப் புரிதலோடும் போராட்ட காலத்தில் வாழ்ந்த பலர் இப்போது இல்லை. வரலாற்றில் வாழ்ந்த, ‘சாட்சி நிலை’ நின்று வரலாற்றை அணுகும் தகைமை கொண்ட நேர்மையாளர்களால் அரசியல் சரித்தன்மை (political correctness) கொண்ட வரலாறு படைக்கப்பட வேண்டும்.
 
2025-07-07
அமரதாஸ்
 
மேலதிகமாக வாசிக்கக்கூடிய கட்டுரைகளும் வீடியோ பதிவுகளும் இணைப்பில் உள்ளன.