ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இழைந்திருக்கும் செல்லப்பாவின் குரல்

சில வருடங்களுக்கு முன்னர் (2021), பாடகர் செல்லப்பா அவர்கள் மறைந்துவிட்டதாகப் போலிச் செய்தி பரவியது. அப்போது அவரது இருப்பை உறுதிசெய்த பின்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இப்போது அவர் நிஜமாகவே மறைந்துவிட்ட செய்தி வந்திருக்கிறது. அன்னாருக்கு எனது அஞ்சலி!
2026-04-28
அமரதாஸ்
2021 இல் எழுதப்பட்ட கட்டுரை
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இழைந்திருக்கும் செல்லப்பாவின் குரல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து, பல பாடல்களைப் பாடிய பாடகர் ‘தேனிசை’ செல்லப்பா அவர்கள், 1990 இல் ஈழத்தில் இசை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். முதலில் யாழ். மாவட்டத்திலும், பின்னர் வேறு மாவட்டங்களிலும் அவரது இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. அங்கெல்லாம், வி. பு. இயக்கத்திற்காக ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த சில பாடல்களைப் பாடினார்.
வன்னிக் காடுகளில் இருந்து வெளியேறியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் முன்னிலையில், தருமபுரம் பகுதியிலே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தலைமைச் செயலக முகாம் வளாகத்தில், செல்லப்பாவின் பிரத்தியேகமான இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. பிற்காலத்தில் வி. பு. இயக்க அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த திரு. நடேசன், அந்த முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், அதன் துணைத் தலைவர் திரு. கோ. மகேந்திரராசா (மாத்தையா), விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்னும் கட்சியின் செயலாளர் நாயகம் திரு. யோகரத்தினம் யோகி, திரு. அன்ரன் பாலசிங்கம் உட்பட, இப்போது இல்லாத பல போராளித் தோழர்களோடு செல்லப்பாவின் இசை நிகழ்ச்சிகளை அக் காலத்திலே பார்க்க முடிந்திருக்கிறது.
மேடையில் அமர்ந்திருந்து, மடியில் ஒரு கையைத் தட்டியபடியும் கைகளைக் காற்றிலே வீசித் தாளமிட்டபடியும், செல்லப்பா உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்த நினைவு பசுமையாக இருக்கிறது. பாடும்போது, மடியில் அவர் உற்சாகமாகப் போடும் தாளம் ஒலிவாங்கி வழியாக அதீதமாகக் கேட்டுக்கொண்டிருக்கும். அது பாடல்களின் மூலத்தன்மைக்கு ஊறு செய்வதாக அமையாதா என்று அவரிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். மேடை இசை நிகழ்வில் அது பிரச்சினையாக அமையாது என்றும் பாடல் ஒலிப்பதிவு நடக்கும்போது அப்படிச் செய்ய முடியாது என்றும் அவர் சொன்னதாக நினைவு இருக்கிறது. பாடல்களைப் பாடிக்கொண்டிருக்குபோது இடையில் அவ்வப்போது தேவைக்கேற்ப அவர் பேசுவார். இசை மேடையை வில்லுப்பாட்டு மேடை போல லாவகமாகப் பயன்படுத்தக்கூடியவர் அவர்.
வி. பு. இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இருந்த புதுவை இரத்தினதுரை அவர்களும், இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் தங்கவேலாயுதம் (தேவர் அண்ணன்) அவர்களும் வேவ்வேறு இடங்களில் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
போராட்ட வரலாற்றில் முக்கியமானவையாகக் கருதப்படுகிற சில பாடல்களைப் பாடிய போராட்டப் பங்களிப்பாளராக எப்போதும் செல்லப்பா கருதப்படுவார். தனித்துவமான தனது குரலை லாவகமாக இழைத்துச் சில பாடல்களின் கனதியைக் கூட்டியிருக்கிறார். எழுதிக்கொடுத்தவர்களின் விருப்பங்களுக்காக, செயற்கையான சில வரிகளையும் கோசங்களையும் அவர் ‘வலிந்து’ பாடலாக்கிப் பாடியிருக்கிறார் என்பதையும் ரசனை சார்ந்த அவதானிப்பாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது.
செல்லப்பா பாடிய ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…’ என்று தொடங்கும் பாடலை, இறுதிப் போர்க்காலத்தின் இறுதி நாட்களில், ‘புலிகளின் குரல்’ வானொலி திரும்பத்திரும்ப ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. கொடிய போர் சார்ந்த அழிவுகள், இழப்புகள், வாழ்வாதார நெருக்கடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் இருந்த மக்கள் மத்தியிலும் சில போராளிகள் மத்தியிலும் அது விசனத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இது பற்றி அப்போது அந்த வானொலியின் முக்கியஸ்தர்களாகவும் எனது நண்பர்களாகவும் இருந்த திரு. தவபாலன், திரு. ஜவான் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறேன். அவலங்கள் நிறைந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், அவலச் செய்திகளுக்கு இடையில், பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் அந்தப் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவதால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்து, இப்போதும் இருக்கக்கூடிய வேறு சிலருக்கும் எடுத்துச்சொல்லியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டுப் பலராலும் கொண்டாடப்பட்ட அந்தப் பாடல், ஒரு கட்டத்தில் இகழப்படக்கூடிய நிலை தோன்றியதற்கு செல்லப்பாவைக் காரணமாக்க முடியாது என்பது வேறு விடயம்.
‘வல்வெட்டித் துறையில் நாங்கள் வளர்த்த சிதை நெருப்பில் பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப் படுத்ததை நெஞ்சம் மறக்குமா…’ என்று செல்லப்பா பாடிய பாடலை எழுதியவர் (புதுவை இரத்தினதுரை), அந்தப் பாடலில் ஒரு வரலாற்றுக் கதை சொல்ல முற்பட்டிருப்பார். அது முழுமையானதல்ல. ‘எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள் இவர்கள் அல்லவா…கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட கதையைச் சொல்லவா…? தங்கத் தமிழீழ விடுதலை காண நெஞ்சம் துடித்தாரே…சிங்கள இந்திய அரசுகள் சதியால் நஞ்சைக் குடித்தாரே…’ என்னும் வரிகள் அப் பாடலில் இருக்கும்.
திரு. குமரப்பா, திரு. புலேந்திரன் உட்பட வி. பு. இயக்கப் போராளிகள் பலர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளியில் இருந்து வி. பு. இயக்கத் தலைமையால் இரகசியமாக நஞ்சு (சயனைட்) அனுப்பப்பட்டிருந்தது என்பது அதிகம் பேசப்படாத வரலாறு. ஆக, அவர்கள் நஞ்சருந்தித் தியாகச்சாவடைய வி. பு. இயக்கத் தலைமை முக்கிய காரணமாக இருந்தது. நீண்டகாலப் போராட்ட அனுபவங்களைக் கொண்டிருந்த அந்தப் போராளிகளை மீட்பதற்கோ உயிராபத்தைத் தவிர்த்து வாழவைப்பதற்கோ, அக் காலத்தில் இயலக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டிருக்க முடியும். அப்போதுதான் திலீபன் அவர்களின் தியாகச்சாவு, நிகழ்ந்திருக்கக்கூடாத நிகழ்வாக நல்லூரில் அரங்கேறியிருந்தது. அவரது உடலை மருத்துவ ரீதியிலே பதப்படுத்துவதற்காக குமரப்பாவும் வேறு சிலரும் அப்போது எடுத்துச்சென்றிருந்தார்கள். திலீபனின் சகோதரரும் அவரது தந்தையும் அப்போது குமரப்பாவிடம் துயரார்ந்த முறைப்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.
திலீபனின் தியாகச்சாவு, அக் காலத்திலே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. இதனை அப்போது மிகச்சிலரைத் தவிர வேறெவரும் புரிந்துகொண்டிருக்கவில்லை. அக் காலச் சூழ்நிலையிலே தவிர்த்திருக்கூடிய வீணான தியாகச் சாவுகளின் வரிசையிலே குமரப்பா, புலேந்திரன் உட்பட, பன்னிரு போராளிகளின் தியாகச்சாவுகளும் அடங்கிவிட்டன என்பது எவராலும் பேசப்படாத துன்பியல் வரலாறு.
இத்தகைய வரலாற்றுப் பார்வையோடு அணுகுவதாலோ என்னவோ, அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் இனம்புரியாத நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். செல்லப்பா உருக்கமாகப் பாடிய விதமும் பாடலின் இசை அமைப்பும், தியாகச் சாவடைந்தோர் சார்ந்த இழப்புணர்வைத் தீவிரப்படுத்தக்கூடியவை.
‘எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டுச் செல்கின்றோம்…’ என்று தொடங்கும் பாடலில் இழையும் செல்லப்பாவின் குரல், தொண்ணுறுகளின் ‘நினைவேக்கம்’ (nostalgia) சார்ந்த உணர்வுகளைக் கிளர்த்திவிடக் கூடியது.
அதே பாடலில், ‘இளமை நாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்…’ என்று தொடரும் வரி அழுத்தமானது. இளமை நாட்களின் கனவுகளையெல்லாம் புதைத்துத் தியாகச் சாவடைந்துவிட்ட தோழர்கள் எல்லோரையும் செல்லப்பாவின் குரலும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும்.
2021-11-03
அமரதாஸ்






