வெளிவருகிறது ‘நீளிரா’ திரைப்படம்

நீண்டகால நண்பர் சோமீதரன் அவர்கள் உருவாக்கிய ‘நீளிரா’ என்னும் திரைப்படம், 2026-04-03 அன்று வெளிவரவுள்ளது.
ஊடகராகச் செயற்பட்ட காலத்திலும் ஆவணத் திரைப்படங்களை உருவாக்கிய சந்தர்ப்பங்களிலும் சோமீதரனுடன் நெருக்கமான தொடர்பில் இருக்க முடிந்திருக்கிறது. சந்திக்க முடிகிற சந்தர்ப்பங்களில் அதிகமதிகம் திரைப்பட உருவாக்கம் பற்றி உரையாடியிருக்கிறோம்.
திரைக்கலைஞர் தங்கர் பச்சான் அவர்களது ஏற்பாட்டில், திரைக்கலைஞர் பாலுமகேந்திரா அவர்களை முதன்முறையாக நேரில் நான் சந்தித்தபோது சோமீதரன் உடனிருந்தார். சென்னையில் அவரது வீட்டிலே தங்கியிருந்து திரைத்துறை சார்ந்து உரையாடிய நாட்கள் மறக்க முடியாதவை. நல்ல திரைப்படங்களை உருவாக்கும் எண்ணம் நமக்குள் எப்போதும் தொடரக்கூடியது.
ஈழத்தின் போர்க்கால வாழ்வியலின் சிறு பகுதியை ‘நீளிரா’ திரைப்படம் வாயிலாகக் கலையாக்கம் செய்து, நீண்டகாலக் கனவை நிறைவேற்றியிருக்கிறார் சோமீதரன். இதற்காக அவர் மேற்கொண்ட பிரயத்தனங்களை அறிவேன். திரைத்துறை சார்ந்து, ஆக்கபூர்வமாக அவர் தொடர்ந்து செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இத் திரைப்படத்தின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய, சோமீதரனுக்கு உறுதுணையாக இருந்த, திரைக்கலைஞர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி!
நண்பரின் படைப்பு வீரியமாக வெளிவருவதில் மகிழ்ச்சி… நண்பரின் வெற்றி, சொந்த வெற்றியாகவே தோன்றுகிறது.
‘நீளிரா’ திரைப்பட இயக்குநர் சோமீதரனுக்கும் இத் திரைப்படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்!
அமரதாஸ்
2026-03-28


