தொல். திருமாவளவன் பார்வைக்கு: ஒரு திறந்த மடல்

 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம். 
 
2002 ஆம் ஆண்டு, ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டிற்காக நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபோது, உங்களைச் சந்தித்திருக்கிறேன். அந்த மாநாட்டில், உங்கள் முன்னிலையில் நானும் ஊடகத்துறை சார்ந்து உரையாற்றினேன். இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தமிழ்நாட்டிலும் நாம் சந்திக்க முடிந்திருக்கிறது. 
 
 ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாடு யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்த பின்னர், தமிழ்நாட்டில் இருந்து உங்களோடு கூடவே வந்திருந்த ஏனைய நான்கு பிரதிநிதிகளையும் உங்களையும், பிரத்தியேகமாகத் தங்கவைத்திருந்த இடத்திலே சந்தித்து உரையாடியிருக்கிறேன். அப்போது, பாதுகாப்பு மற்றும் வேறு தேவைகளுக்காக உங்களோடு சில ‘போராளிகள்’ தங்கியிருந்தார்கள். அவர்களும் நானும் நீங்களும் ஏனைய நான்கு தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளும் கூடிநின்று ஓவியர் மருது அவர்களின் கமெரா வில் அப்போது உருவாக்கிக்கொண்ட ஒளிப்படம், இப்போதும் ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கிறது. 
 
தமிழ்நாட்டின் அரசியல் சார் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில், ஒப்பீட்டளவில் முற்போக்கான பண்புகளைக் கொண்ட தலைமைச் சக்தியாக அறியப்படுகிறீர்கள். முற்போக்குச் சிந்தனை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமை, பகுத்தறிவுவாத ஈடுபாடு போன்றவற்றைக் கொண்ட அரசியல் செயற்பாட்டாளராக இருக்கிறீர்கள். அந்த வகையில், உங்களைச் சந்திப்பதிலும் உங்களோடு உரையாடுவதிலும் தோழமை பாராட்டுவதிலும் மகிழ்ச்சி!
 
இந்தத் திறந்த மடல் மூலம், சில விடயங்களை உங்களோடு தோழமை உணர்வுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 
 
***
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை 2002 ஆம் ஆண்டில் முதன்முறை சந்தித்தீர்கள்.
 
தனது காதல் தொடர்பான பிரச்சினைகளால் “வல்வெட்டித்துறையிலே 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்.” என்று உங்களிடம் பிரபாகரன் சொன்னதாக, அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருக்கிறீர்கள். 
 
அத்தகைய அசம்பாவிதம் எதுவும் நடந்ததாக இதுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தால், பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு மட்டுமாவது எப்படியோ தெரிந்திருக்கும். பிரபாகரனின் தனிப்பட்ட இயல்புகளையும் அவரது காதல், திருமணம் சார்ந்த விடயங்களையும் நன்கு அறிந்திருப்பதாக நினைக்கிறேன். அந்த வகையில், அவர் உங்களுக்கு அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
 
சாதியம் மற்றும் தனது திருமணம் தொடர்பில் அவர் சொன்ன வேறு விடயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். தவறான புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் அல்லது ஏதோ காரணத்தால் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.
 
பிரபாகரன் தொடர்பான உங்களது கூற்று, அவரது அபிமானிகள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஒரு தன்னிலை விளக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கிறீர்கள். “அண்ணன் பிரபாகரன் அவர்கள் ‘சாதியத்தை எதிர்த்தார்’ என்பதற்கு மாறாக, ‘காதலுக்காகத் தண்டனை வழங்கினார்’ என பொருள்படும்படி எனது உரை அமைந்தது ஒரு பிறழ்வே தவிர வேறேதும் இல்லை.” என்று அந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது பிறழ்வா? தவறா? என்பது விவாதத்திற்குரியது. 
 
எது எப்படியிருந்தாலும், “எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.” என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. 
 
அந்த அறிக்கையிலே தெளிவுத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டுப் பேசுவோரால், அந்த அறிக்கையும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு நேர்காணலில் அல்லது உரையில் உங்களது தன்னிலை விளக்கத்தை நம்பகத்தன்மையோடும் தெளிவாகவும் இன்னொரு முறை பதிவுசெய்ய நீங்கள் முயற்சிக்கலாம். 
 
உங்களது செயற்பாடுகள் சார்ந்து நியாயமான கேள்விகளும் கோரிக்கைகளும் எழுப்பப்படுமாயின், அரசியல் செயற்பாட்டாளராக அவற்றுக்குத் தெளிவாகப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் சனநாயகக் கடமை. (காழ்ப்புணர்வுடனோ அரசியல் உள்நோக்கத்துடனோ முன்வைக்கப்படும் கருத்துகளைப் புறக்கணித்துவிடலாம்.) 
 
பொதுத்தளத்திலே தன்னால் நிகழ்ந்துவிட்ட ஒரு தவறுக்கு ஒருவர் வருத்தம் தெரிவிப்பதும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கோருவதும் மானுட நற்பண்புகள் ஆகும். அவை, நல்ல தலைமைப் பண்புகளாகவும் அமையும்.
 
***
 
தமிழ்நாட்டிலே மதிவதனி அவர்களைத் திருமணம் செய்துகொண்ட பிரபாகரன், அதன் பின்னர் குறிப்பிட்ட காலம் கழித்தே ஈழத்திற்குத் திரும்பியிருந்தார். இடைப்பட்ட காலத்திலும் பின்னரும் வல்வெட்டித்துறை என்னும் அவரது சொந்த ஊரில், அவரது ‘சாதி மறுப்பு’ வகைப்பட்ட திருமணத்திற்கு எதிர்ப்புகள் எழுந்ததாகவோ அதன் நிமித்தம் கொலைகள் நிகழ்த்தப்பட்டதாகவோ நம்பகமான தகவல்கள் இல்லை. ஆனால், ஈழத்தமிழர்கள் மத்தியிலே சாதிய முரண்பாடுகளும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் அக் காலத்தில் நிலவியதை மறுக்க முடியாது. காலப்போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பலமடைந்து கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தபோது சாதிய முரண்பாடுகள் அடங்கிக் கிடந்தன என்று சொல்லலாம். 
 
தமிழ்நாட்டில் நடப்பது போல, சாதிய ஆணவக் கொலைச் சம்பவங்களோ மோசமான சாதிய இழிசெயல்களோ ஈழத்தில் நடப்பதில்லை. எது எப்படியிருந்தாலும், சாதியம் சார்ந்த பாகுபாடுகளும் முரண்பாடுகளும் இப்போதும் தொடர்கின்றன என்பதே கசப்பான யதார்த்தம்.
 
*** 
 
பிரபாகரன் – மதிவதனி திருமணம், அவர்களது உறவினர்களின் பங்கேற்பு இல்லாமலே தமிழ்நாட்டில் அவசரகதியில் நடந்தமைக்குச் சில காரணங்கள் இருந்தன. அந்தத் திருமண நிகழ்வின் பின்னணியில் நடந்த சில விடயங்களை அப்போது மிகச் சிலர் மட்டுமே அறிந்திருந்தார்கள். அப்போது பிரபாகரனின் காதல் மற்றும் திருமணம் சார்ந்த விடயங்களில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தவர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். அவர் மூலமும் விடுதலைப் புலிகள் இயக்க ‘மூத்த’ உறுப்பினர்கள் சிலர் மூலமும் அத்தகைய விடயங்களை நம்பகத்தன்மையோடு அறிந்திருக்கிறேன். 
 
பிரபாகரனின் திருமணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவசியமான நிகழ்வு. இது பற்றி அன்ரன் பாலசிங்கம் தனிப்பட்ட உரையாடல்களின்போது பலமுறை சொல்லியிருக்கிறார்.
 
உயிருக்கு உத்தரவாதமற்ற போராட்ட வாழ்வில் இருந்ததாலும் ‘தாழ்த்தப்பட்ட’ அல்லது ‘மாறுபட்ட’ சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததாலும், பிரபாகரனை மதிவதனியின் பெற்றோர் ஆரம்ப காலத்திலே ஏற்றுக்கொள்ளத் தயங்கியிருக்கலாம். வி. பு. இயக்கம் வளர்ச்சியடைந்த காலத்தில், பிரபாகரனும் மதிவதனியும் தமது பிள்ளைகளுடன் கலந்துகொண்ட சில உள்ளக நிகழ்வுகளில், மதிவதனியின் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தார்கள். 
 
பிரபாகரனின் திருமணத்திற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள்ளே காதல் மற்றும் திருமணம் ஆகியவை அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இத்தகைய பின்னணியில், அவரது சடுதியான திருமண ஏற்பாட்டைத் தொடர்ந்து சில போராளிகள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. பெரும்பாலான போராளிகள் அந்தத் திருமணத்தை வரவேற்றார்கள். இனி வருங்காலத்திலே தாமும் காதலிக்கலாம் அல்லது திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்க முடியும். 
 
பிரபாகரனின் திருமணம் நடந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்த அவரது நண்பர் ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவர், பிரபாகரனின் திருமண ஏற்பாடு நடந்தபோது அது பற்றி அவருடன் நேரடியாக உரையாடியவர். எனது நண்பராக இருக்கும் அவருடன் நேற்று உரையாட முடிந்தது. 
 
‘தமிழ் மன்னர்களை விமர்சனபூர்வமாக அணுகுவதாகச் சொல்லும் திருமாவளவன், பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகும் பண்பைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.’ என்று அந்த நண்பருக்குச் சொன்னேன். தமிழ் மன்னர்கள் மட்டுமல்ல, பிரபாகரன் உள்ளிட்ட போராட்டத் தலைவர்கள் மற்றும் அரசியல் சார் செயற்பாட்டாளர்கள் போன்ற எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
 
எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாத, எதிர் விளைவுகளை (backfire) உருவாக்கிய கொலைகளுக்கும் தவிர்த்திருக்கக்கூடிய, வீணான தியாகச் சாவுகளுக்கும் காரணமாக அல்லது பொறுப்பாக இருந்த பிரபாகரன், அவற்றுக்காகப் பொதுவெளியில் வருத்தம் தெரிவித்ததில்லை; மன்னிப்புக் கோரியதில்லை. 
 
‘யாழ் குடாப் பகுதியில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமைக்கு வருத்தப்படுகிற நீங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் பிற இயக்கத்தவர்களைப் படுகொலை செய்தமைக்கு வருத்தப்படுகிறீர்களா?’ என்பதாக நேர்காணல் ஒன்றில் ஒரு ஊடகர் பிரபாகரனிடம் கேட்டிருந்தார். ‘எதிரிகள் வேறு, துரோகிகள் வேறு. துரோகிகளுக்கு மன்னிப்புக் கிடையாது. இதற்கு மேல் இதை விரிவுபடுத்த வேண்டாம்.’ என்பதாக அப்போது பிரபாகரன் பதில் சொல்லியிருந்தார். கிளிநொச்சியில் அவரது ஊடகச் சந்திப்பு முடிந்த பிறகு, மறுநாள் அதிகாலையில் அந்த நேர்காணல் பதிவுசெய்யப்பட்டது.
 
ஈழத்திலே போராட்ட இயக்கங்களுக்கு இடையில் நிகழ்ந்த கொலைகள், ‘சகோதரப் படுகொலைகள்’ என்று அறியப்படுகின்றன. அவை சார்ந்த பிரபாகரனின் தனிப்பட்ட பார்வையானது கடந்த காலத்தில் எப்படியும் இருந்திருக்கலாம். நீண்டகாலம் கழிந்த பின்னரும் ‘சகோதரப் படுகொலைகள்’ சார்ந்த அவரது பார்வையில் முதிர்ச்சியோ மனிதாபிமானக் கண்ணோட்டமோ ஏற்பட்டிருக்கவில்லை. குறைந்தபட்சம், ஒரு தலைவராக அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டிய முக்கியமான இடம் அது. அவரது தலைமைத்துவம்  தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 
 
***
 
‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரன் சார்ந்த விடயங்களையும் அடையாளங்களையும் சுயலாப அரசியல் உள்நோக்கங்களுடன் தமிழ்நாட்டிலே தவறாகப் பயன்படுத்திவருகிறார். தனது ஈழப் பயணம் சார்ந்து மிகைப்படுத்திய, இட்டுக்கட்டிய, பொய்யான தகவல்களை அவர் தொடர்ந்தும் சொல்லிவருகிறார். சில உண்மைகளோடு பொய்களைக் கலந்துகட்டித் திரும்பத்திரும்ப அவர் பேசுவதால் பொய்களையும் உண்மைகள் என்று சிலர் நம்பக்கூடும். ஆனால், அவரது பொய்கள் எப்போதும் பொய்களே.
 
சீமானின் ஈழப் பயணம் சார்ந்த விடயங்கள் பலவற்றை நேரடியாக அறிந்த ஒருவராக, அப் பயணக் காலத்தில் அவரை ஒளிப்படங்களிற் பதிவுசெய்தவராக, சீமானுடைய போலித்தனங்கள் சிலவற்றையும் தவறுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருக்கிறேன். 
 
‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போல நான் உருவாக்கியிருந்த ஒளிப்படங்களை, விடுதலைப் புலிகள் இயக்கம் சீமானுக்குப் பயிற்சி வழங்கியபோது உருவாக்கப்பட்டவை என்று பொய் சொல்லி நாம் தமிழர் கட்சியினர் பரப்பியிருக்கிறார்கள். பொதுவெளியில் ஆதாரபூர்வமாக அது பற்றி நான் பேசியதால் அந்த ‘ஊழல்’ அல்லது மோசடி அம்பலமானது. அந்த மோசடிக்காக இதுவரை சீமானோ அவரது கட்சி சார்ந்த எவருமோ வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்புக் கோரவும் இல்லை. 
 
பிரபாகரனைச் சந்தித்த பின்னர், ‘எல்லாளன்’ திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் 2008-02-15 அன்று சீமான் என்னைச் சந்தித்திருந்தார். அன்றுதான் ஆயுதங்களுடன் அவர் இருப்பது போன்ற ஒளிப்படங்களை அவரது விருப்பத்திற்கேற்ப உருவாக்கியிருந்தேன். அதைத் தொடர்ந்து, வேறு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘எல்லாளன்’ படப்பிடிப்புத் தளத்தில் 2008-02-17 அன்று எறிகணை வீழ்ந்து வெடித்ததில், லெப். கேணல் தவா அவர்களுடன் மேஜர் புகழ்மாறன் அவர்களும் வேறு இருவரும் தியாகச்சாவு அடைந்தனர். அதன் பின்னர் சீமான் வன்னியிலே தங்கியிருப்பதற்கான அவசியம் இருக்கவில்லை. வேறு இடங்களில் நிகழ்ந்த விமானத் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் போன்றவற்றை அறிந்து எப்போதும் பயந்த நிலையிலேயே இருந்தார். (சீமானுடன் அங்கு தங்கியிருந்த, திரு. சந்தோஸ், திரு. முருகன், திரு. நந்து ஆகியோர் சீமானின் பயத்தை நேரடியாகவே நன்கு அறிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்கள், ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்காக வன்னிக்கு வந்திருந்தார்கள்.) 
 
வன்னியில் அறியப்பட்ட சீமானின் சில நடத்தைகள், அவர் மீதான அதிருப்திகளைக் கூட்டின. தொடர்ந்தும் அவர் அங்கிருப்பதை எவரும் விரும்பியிருக்காத நிலையில், அவரது விசா செல்லுபடிக் காலம் நீடிக்கப்படாமலே அவர் வன்னியில் இருந்து இரண்டாவது வார நிறைவில் வெளியேற்றப்பட்டிருந்தார். 
 
நேர்காணல்களில் அவரே சொல்லியிருப்பது போல ஒரு மாதம் அவர் வன்னிக்குள் இருக்கவில்லை. அது மட்டுமல்ல, தியாகச்சாவடைந்த புகழ்மாறன், தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்ததாகப் பொய் சொல்லிவருகிறார். உண்மையில், ‘எல்லாளன்’ திரைப்படத்தின் பிரதான பாத்திரமேற்று நடித்துக்கொண்டிருந்த போராளிதான் புகழ்மாறன். அவருக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அப்போது சீமான் தங்கியிருந்த கிளிநொச்சிப் பகுதியில், தனிப்பட்ட பாதுகாப்பாளர்களை அவருக்காக நியமித்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவருக்கும், அப்போது ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திலே பங்களித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டவர்களுக்கும் பொதுவாக உதவியாளர்கள் இருந்தார்கள். 
 
சீமான், பிரபாகரனைச் சந்தித்தபோது உருவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் அவருக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அவற்றைப் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப்போயிருந்தார். சீமானால் அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்னும் எச்சரிக்கை உணர்வு, விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்தவர்களிடம் பொதுவாக இருந்திருக்கிறது. 
 
நெருக்கமாகப் பழகியிருக்காத எவரையும் இலகுவில் நம்பிவிடாத பிரபாகரன், எதன் பொருட்டும் சீமானை நம்பியிருக்கச் சாத்தியமில்லை. ஆனால், சில தேவைகளுக்காக சீமானைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கம், பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்தவர்களுக்கு இருந்திருக்கக்கூடும். 
 
பொதுவாக நோக்கும்போது சீமானைக் கையாண்ட விதத்திலும் அவரை அணுகிய முறையிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்தவர்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பிரபாகரன் தனது ‘மண்டையைக் கழுவி’ அனுப்பியதாக, இப்போது சீமான் சொல்லக்கூடிய ‘அவல நிலை’ உருவாகியிருக்கிறது. சீமான் சொல்லிக்கொள்வது போல, சீமானுக்குப் பிரபாகரன் பயிற்சி கொடுத்து உசுப்பேற்றி அனுப்பியிருந்தால், பிரபாகரன் செய்த வரலாற்றுத் தவறுகளில் ஒன்றாகவே அது இருக்கும்.
 
சீமானைப் பொறுத்தவரையில், பிரபாகரனின் முழு நம்பிக்கை பெற்று அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவராகத் தன்னை வலிந்து காண்பிக்க முனைகிறார். மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தின் தனி உரிமையாளராகவும் ‘நாம் தமிழர் கட்சி’ சார்ந்து தன்னைக் கட்டமைக்க விழைகிறார். தமிழ்நாட்டிலே தமிழ்த் தேசிய அரசியலை முற்போக்கான  திசையில் எந்தக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்க முடியும்.
 
பிரபாகரன் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் அவரது நல்ல பண்புகளை நன்கு அறிவேன். அவர், சீமானைப் போல கோமாளித்தனங்களும் குளறுபடிகளும் நிறைந்த அரசியல்வாதியல்ல; அர்ப்பணிப்பு உணர்வுடன் தியாக வாழ்வில் இருந்த போராளி. 
 
சீமான் தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை. நெருக்கமான தொடர்பில் இருந்திருந்தால் வன்னியில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை அவரால் எப்படியாவது பெற்றிருக்க முடியும். இதன் அர்த்தம், வி. பு. இயக்கம் சீமானை எதற்காகவும் நம்பியிருக்கவில்லை என்பதுதான். அவர் வாய்ப்பேச்சில் மட்டும் வல்லவராக இருந்த அக் காலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அவர்களும் வேறு சிலரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வி. பு. இயக்கத்திற்கான உதவிப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்துகொண்டிருந்தார்கள். வன்னியரசு, வன்னிக்கு வந்திருந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவரையும் சந்திக்க முடிந்திருக்கிறது. 
 
வன்னியில் இருந்த இரண்டு வாரங்களுக்குள்ளே சீமான் பல இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். எனினும், சில இடங்களுக்கு அவரைக் கூட்டிச்செல்லக் கூடாது என்று ‘கண்டிப்பான உத்தரவு’ இருந்தது. அவர் செல்ல விரும்பியிருந்தும் அழைத்துச்செல்லப்படாத ஒரு இடத்தையும் அதற்கான காரணத்தையும் நன்கு அறிந்திருக்கிறேன். 
 
சீமான் வன்னியில் இருந்தபோதும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் அவர் தொடர்பான சில விசாரணைகள் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. 
 
சீமானின் ஈழப் பயணம் சார்ந்த குளறுபடிகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த அனைத்தையும் இன்னும் பொதுவெளியில் நான் பேசிவிடவில்லை. 
 
இந்திய அரச இயந்திரத்தின் வரையறைகளை மீறிச் செயற்பட முடியாத ஒரு மாநில முதலமைச்சர் பதவியை அடைவதற்காக வெறுப்பரசியலை விதைத்துக்கொண்டிருக்கும் சீமான், ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியல் சார்ந்து பெரிதாக எதையாவது சாதித்துவிடுவாரென்று யாராவது நம்பினால், அவர்கள் முட்டாள்களாகவோ ஏமாளிகளாகவோ இருக்க வேண்டும். 
 
பல்வேறு காரணங்களாலும் தமக்குள்ளே பிளவுபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழரிடையே நிலவக்கூடிய அறியாமைகளையும் இயலாமைகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் துயரங்களையும், சீமான் தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். 
 
சீமானுக்கு ஆதரவும் திரள்நிதியும் வழங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர், தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தீங்கிழைக்கிறார்கள். 
 
சீமானைப் போல, திருமாவளவனோ வேறு எவருமோ பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்து தவறான அல்லது திரிபான தகவல்களை வெளிப்படுத்தக்கூடிய அரசியல்வாதிகளாக அறியப்பட்டுவிடக் கூடாது என்னும் கரிசனம், பொதுவாகத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. 
 
***
 
பகுத்தறிவை வலியுறுத்திச் செயற்பட்ட ஈ. வெ. ராமசாமி அவர்கள், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தியாகப் பார்க்கப்படுகிறார். அவரது முற்போக்குச் சிந்தனைகளை ஏற்கக்கூடிய தமிழ்நாட்டு அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர், தம்மளவில் சுயமரியாதை மற்றும் சனநாயகப் பண்புகளைக் கடைப்பிடிப்பதில்லை.
 
கால மாற்றங்களுக்கு ஏற்றபடி கோட்பாடுகளை அல்லது கருத்தியல் அடித்தளங்களை மறுசீரமைத்துக்கொண்டும் பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சரியாகப் புரிந்துகொண்டும் தமிழர் நலன்கள் சார்ந்து இணைந்து செயற்படக்கூடிய அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள் அதிக அளவில் உருவாக வேண்டியது அவசியம். (பகுத்தறிவுச் சிந்தனை என்பது, வெறுமனே ‘கடவுள்’ மறுப்பு நிலைப்பாட்டுக்கு மட்டுமானதல்ல.) 
 
கோட்பாடுகள் அல்லது கருத்தியல்கள் அனைத்தும் கற்பிதங்களே. அதிகார மையங்களும் கருத்துலக மூலங்களும் தனிமனித மற்றும் சமூகத் தேவைகளும் அவற்றைத் தீர்மானிக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான, அடிப்படைவாத மற்றும் இயற்கை விரோதப் பண்புகளைக் கொண்ட எத்தகைய கோட்பாடுகளும் சமூக, சட்ட நடைமுறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டியவை. 
 
தமிழ்நாட்டில் நிலவும் திராவிடம், தமிழ்த்தேசியம் போன்ற கருத்தியல்கள், அரசியல் மற்றும் சமூகத் தேவைகள் சார்ந்து முற்போக்கு அம்சங்களையும் சமூக நீதிப் பண்புகளையும் சனநாயக உள்ளடங்கல்களையும் கொண்டவையாக மறுசீரமைக்கப்பட வேண்டியவை. எந்தத் தனி நபரும் எத்தகைய அமைப்புகளும், நடைமுறைத் தேவைகளை மீறி எத்தகைய கருத்தியல்களையும் வலிந்து திணிக்க முடியாது. எந்தக் கருத்தியலையும் எவரும் குத்தகைக்கு வைத்திருப்பது போல, தனி உரிமை பாராட்ட முடியாது. 
 
அனைத்துக் கோட்பாடுகளும், இயற்கை விதிகளுக்கும் மானுட நலன்களுக்கும் உட்பட்டவை. நடைமுறைத் தேவைகள் சார்ந்த கொள்ளலும் கொடுத்தலும் இன்றி இறுகிப்போகும் கோட்பாடுகளால் மானுட குலத்துக்கு எந்த நன்மையும் இல்லை; பெருமையும் இல்லை. 
 
***
 
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த விடயங்கள், சுயநல அடையாள அரசியல் சார்ந்து தமிழ்ச்சூழலில் பயன்படுத்தப்படும் போக்கு ஆரோக்கியமானதல்ல. 
 
பலமான ஆயுதப் போராட்ட அமைப்பாக இருந்த வி. பு. இயக்கம், ஈழத்தமிழர்களுக்கு ஆரோக்கியமான அரசியற் தீர்வு எதையும் பெற்றுத்தர முடியாத நிலையில் அழிந்துபோயிருக்கிறது என்பது கசப்பான யதார்த்தம். பூகோள அரசியல் இழிவுகள் சார்ந்த புறக்காரணிகள் மட்டுமல்ல, அகக்காரணிகளும் தலைமைத்துவத் தவறுகளும் இத்தகைய மோசமான அழிவிலே தொடர்புபட்டிருக்கின்றன. இத்தகைய விடயங்கள், வரலாற்றுப் பார்வையோடும் விடுதலை அரசியல் சார் மனப்பான்மையோடும் ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும், இத்தகைய விடயங்களில் இருந்து படிப்பினைகள் பெற்றுக்கொள்வதும் விடுதலை அரசியல் சார் செயற்பாடுகளைச் சரிசெய்துகொள்வதும் அவசியம். 
 
பூகோள அரசியல் இழிவுகளாலும் உள்ளக முரண்களாலும் அழிந்துபோய்விட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் உள்ளபடியே புரிந்துகொள்ளாமல், மிகைப்படுத்தல்களோடும் திரிபுவாதங்களோடும் பலரும் புரிந்துகொள்ள முற்படுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் செயற்படுகிற அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் இத்தகைய புரிதற் கோளாறு தாராளமாகவே இருக்கிறது. 
 
ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த விடயங்களையும் அவை சார்ந்த வெகுமக்கள் உணர்வுகளையும், சுய நலன்களுக்காகவும் அடையாள அரசியல் சார் நலன்களுக்காகவும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகளால் அறவழிப்பட்ட நல்ல தலைவர்களாகப் பரிணமிக்க முடியாது.
 
***
 
பிரபாகரன் தியாகச்சாவு எப்போது?
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகச்சாவு, மே மாதம் 17 ஆம் திகதி நிகழ்ந்ததாகவும் அன்றைய நாளில் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடாத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, மே 17 இல் பிரபாகரனின் தியாகச்சாவு நிகழவில்லை; அது மே மாதம் 19 ஆம் திகதி நிகழ்ந்தது. சுயாதீன ஊடகராக, நம்பகமான ஆதாரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்து பொதுவெளியில் அது பற்றி அறிவித்திருக்கிறேன். அது தொடர்பாகப் பலமுறை ஊடகங்களிற் பேசியிருக்கிறேன். 
 
பிரபாகரனின் தியாகச்சாவு 2009 மே 17 ஆம் திகதி நடந்திருப்பதாக ஒரு தரப்பினரும் 2009 மே 18 ஆம் திகதி நடந்திருப்பதாக இன்னொரு தரப்பினரும் நம்பகமான ஆதாரங்கள் இன்றிச் சொல்லிவருவது உண்மை அல்ல. இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த பல விடயங்கள் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் இருக்கின்றன. வரலாற்றுத் திரிபுவாதம், ஒருபோதும் வரவேற்கப்பட முடியாதது.
 
பிரபாகரனின் தியாகச்சாவு 2009 மே மாதம் 19 ஆம் திகதி நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான எனது நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை நீங்கள் ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான உங்களது நிலைப்பாடு சரிசெய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். உண்மையான வரலாற்றை, எவரும் தெரிந்தோ தெரியாமலோ மாற்றியமைக்க முயற்சிக்கக் கூடாது. 
 
***
 
இங்கு சொல்லப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்கெனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய விடயங்களாக இருப்பதால் தொகுத்துச் சொல்ல நினைத்தேன். தொகுத்துப் பார்க்கும்போது புதிய சிந்தனைகளும் கருத்துகளும் தோன்றக்கூடும். வரலாற்றுத் தரவுகளைக் கொண்ட திறந்த மடலாக எழுதுவதால், நம்பகத்தன்மை சார்ந்து சில தகவல்களைச் சேர்க்க வேண்டியிருந்தது. அனைத்தையும் தோழமையின் கருத்தாடலாக அணுகிப் பரிசீலிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவை தொடர்பில் மேலும் விரிவாக உரையாடலாம். மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கக்கூடிய மனநிலையிலேயே எப்போதும் இருக்கிறேன்.
 
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுக் காலத்தில் இரண்டு தசாப்தகால நேரடி அனுபவங்களைக் கொண்டிருக்கும் எனக்கு, இத்தகையை விடயங்களைப் பொறுப்புணர்வோடு எடுத்துரைப்பதற்கான அறவுணர்வும் அறிவொழுக்கமும் இருப்பதாகக் கருதுகிறேன். 
 
மேலதிக விபரங்களுக்காக, நீங்கள் விரும்பினால் என்னுடன் உரையாட முடியும். எப்போதும் தோழமையுடன் உரையாடத் தயாராக இருக்கிறேன். நன்றி!
 
தோழமையுடன்,
அமரதாஸ் (சுயாதீன ஊடகர், கலைஞர்) 
2026-02-14