அதீத துதிகள் அவசியமா?

 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நூல், ஈழத்தமிழர்கள் சிலரது முயற்சியின் விளைவாக, இங்கிலாந்து நாட்டில் அண்மையில் வெளியிடப்பட்டது. அதை ஒரு தரப்பு அநாகரிகமான முறையில் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கிறது. எது எப்படியிருந்தாலும், ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு என்ற வகையில் அந்த நிகழ்வு வரவேற்கப்பட வேண்டியதே. அது பற்றியதல்ல இந்தப் பதிவு; அண்மையில், திருமாவளவனை முன்வைத்துத் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு தொடர்பானது.
 
திருமாவளவனை மேடையில் இருத்தி வைத்துக்கொண்டே அவரை மிகையாகத் ‘துதி’ செய்யும் நிகழ்வு, ‘திருக்குறள் தடத்தில் திருமா’ என்னும் தலைப்பிலே தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. (அதன் பதிவுகளை இன்றுதான் பார்க்க முடிந்தது.) அது, ‘கவியரங்கம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கவிதை என்ற பெயரிலே தனிமனிதத் துதிபாடல்களையே அதீதமாகச் செய்திருக்கிறார்கள். சில சொற்களும் வரிகளும் தீவிரமாக யோசித்து அவசரகதியில் இட்டுக்கட்டியவையாகத் தோன்றுகின்றன. ஒருவரைப் பாராட்டிப் பேசவேண்டுமென்றால், காரணத்தொடர்புகளோடு நேரடியாகவே பாராட்டிப் பேசிவிடலாமே. செயற்கைத்தனமான சொல்லடுக்குகளைக் கவிதை என்னும் பெயரில் வலிந்து ஒப்புவிக்கவேண்டிய அவசியமென்ன? 
 
இப்படியான செயற்கைத்தனமான சொல்லடுக்குகளைக் கவிதை என்று நினைத்துக் காவித்திரியும் பலர், தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ‘தீவிர’ இலக்கியவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்கிறார்கள்.  
 
அந்த நிகழ்வில் வாசிக்கப்பட்டவை கவிதைகளா என்ன? அப்படியொரு மேடை, திருமாவளவனுக்கு அவசியமா? அளவிற்கு மிஞ்சித் துதிபாடும் வரிகளைத் திரும்பத்திரும்ப அழுத்தி வாசித்தால் மட்டும் கவிதை வெளிப்பட்டுவிடுமா? 
 
தமிழ்நாட்டு அரசியல் அரங்கிலே குறிப்பிடத்தகுந்த நிலையில் முற்போக்காகவும் சனநாயகப் பண்புகளோடும் பயணிக்கும் திருமாவளவனுக்கு, வெற்றுக் கோசங்களையும் துதிபாடல்களையும் வெளிப்படுத்தக்கூடிய இத்தகைய மேடைகளால் எத்தகைய பெருமைகளும் மதிப்பும் கூடிவிடப்போவதில்லை. அதீத துதி பாடுதல் எவ்வளவு மோசமானதோ அவ்வளவு மோசமானது அவதூறுகளை விதைப்பது. 
 
திருமாவளவனை, விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்த காலத்திலே ஈழத்திலும், பிறகு தமிழ்நாட்டிலும் சந்திக்க முடிந்திருக்கிறது. அவரை ‘ஓரளவு’ அறிந்திருக்கிறேன். தேர்தல் அரசியல் சார்ந்த, அவரது சில செயற்பாடுகளோடும் கருத்து வெளிப்பாடுகளோடும் முழுமையாக என்னால் உடன்பட முடிவதில்லை. எனினும், அவரைத் தமிழ்நாட்டுத் தமிழர் தரப்பின் தவிர்க்கமுடியாத, ஆளுமை மிக்க சக்தியாகவே கருத முடிகிறது. அவருக்கான சூழ்நிலைகளில், அவருக்கு வாய்க்கக்கூடிய அரசியற் களங்களில் அவர் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர். 
 
‘தலித்’ அடையாள அரசியலை முன்னெடுப்பவராகத் தோன்றினாலும், அதைக் கடந்து ஒட்டுமொத்தத் தமிழின நலன்கள் சார்ந்து சிந்திக்கவும் செயற்படவும் முனைகிறவர் திருமாவளவன். நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் எதையும் அணுகக்கூடிய, சனநாயக உணர்வும் சுயசிந்தனையும் கொண்ட அரசியற் செயற்பாட்டாளர் அவர்.
 
விடுதலைப் புலிகள் இயக்கம் பல்வேறு காரணிகளால் அழிக்கப்பட்ட பின்னரும், அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை எத்தகைய விமர்சனங்களும் இல்லாமலே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிற திருமாவளவன், ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்து இன்னமும் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கிறது. அதீத துதிபாடல்களை மேடையில் மௌனமாக இருந்து ஏற்கும் திருமாவளவன், இன்னமும் பக்குவப்பட வேண்டியிருக்கிறது. 
 
ஆரம்பத்தில் ஒரு இயக்கச் செயற்பாட்டாளராக இருந்து, பின்னர் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் இறங்கிவிட்ட திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகவேண்டியிருக்கும். வீரியம் மிக்க தமிழ் அரசியலாளராக உயர, விழிப்புணர்வுடன் கூடிய நிதானத்தையும் சனநாயகப் பண்புகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அவர், தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் முன்னேற இடமுண்டு; மேலும் முன்னேற வாழ்த்துகள்!
 
2019-08-29
அமரதாஸ்