காட்சிக் கலைஞர் அஜீவன்

அஜீவன் மற்றும் அமரதாஸ் – சுவிஸ் நாட்டில், ஒரு திரையரங்கில் உருவாக்கப்பட்ட ஒளிப்படம்.
நேற்று (2025-09-06) சுவிஸ் நாட்டில் ஒரு நாடக விழா நிகழ்விற்குச் சென்றிருந்தபோது. அங்கு வந்திருந்த நண்பர் ஆதவன் அவர்கள் மூலம், நண்பர் அஜீவன் அவர்களது மறைவு பற்றி அறிய நேர்ந்தது.
அன்னாருக்கு எனது அஞ்சலி…
அவ்வப்போது அவரோடு உரையாடியிருக்கிறேன். அண்மையில் அவரோடு பேச முடிந்திருக்கவில்லை.
‘நிழல் யுத்தம்’, ‘எச்சில் போர்வை’ போன்ற குறுந்திரைப்படங்களை உருவாக்கியிருக்கும் அஜீவன், காட்சிக் கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் பிரபல ஒளிப்பதிவாளரான அண்ட்ரு ஜயமன்ன (Andrew Jayamanne) அவர்களிடம் ஒளிப்பதிவு சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர். இது பற்றி, என்னுடன் உரையாடும்போது சொல்லியிருக்கிறார். அவரைத் தனது ஆசிரியர் என்றே அஜீவன் குறிப்பிடுவார்.
‘புளொட்’ இயக்கத்தின் ஊடகத் தளங்களில் இந்தியாவில் இருந்து செயற்பட்ட அஜீவன், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் அவற்றில் இருந்து வெளியேறியிருந்தார். இந்தியாவிலும் சிங்கப்பூர் மற்றும் சுவிஸ் நாடுகளிலும் வசித்த காலங்களில், அவர் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
புலம்பெயர் சூழலில் ஆரோக்கியமான மாற்றுத் தமிழ் சினமாவை உருவாக்க முயன்ற மிகச் சிலரில் அஜீவன் முக்கியமானவராக இருந்தார். பொதுவாக ஊடகத் தளங்களில் அவர் மேற்கொண்டிருந்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. காட்சிக் கலைகள் சார்ந்த எனது ஈடுபாடுகளைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தும் விதமாக எப்போதும் உரையாடுவார்.
அவர் இயக்கிய குறுந்திரைப்படங்களை வன்னியில் இருந்தபோது (போர்க்காலத்தில்) பார்த்திருக்கிறேன். அவற்றை அங்கிருந்த பலருக்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். ‘நிதர்சனம்’ நிறுவனத்தில் இருந்த சிலர், சுவிஸ் நாட்டுக்குப் பயணித்திருந்த காலத்தில் அஜீவனைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள்.
‘புளொட்’ இயக்கச் செயற்பாடுகளில் இருந்து வெளியேறியிருந்த அஜீவனை, அப்போது இந்தியாவில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு முறை அழைத்துச் சந்தித்திருக்கிறார். தான் சார்ந்த இயக்கத்தில் இணைந்து செயற்படுமாறு அவர் கேட்டபோது, சில காரணங்களைச் சொல்லி அஜீவன் மறுத்திருக்கிறார். பிறகு, அவர் எந்த இயக்கத்தோடும் நேரடியாக இணைந்து செயற்படவில்லை. பிற இயக்கத் தலைவர்களோடு பிரபாகரன் இருக்கும் காட்சியை (வீடியோ) அவர் இந்தியாவில் இருந்தபோது பதிவு செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் அவர் என்னிடம் நேரடியாகவே சொல்லியிருந்தார்.
பிரபாகரனுக்கு அஜீவன் பற்றித் தெரிந்திருந்தது. அஜீவன் இயக்கிய குறுந்திரைப்படங்களை அவர் பார்த்திருக்கிறார். நிதர்சனம் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்கள் சுவிஸ் நாட்டுக்குப் பயணம் செய்தபோது, அஜீவனைச் சந்திக்குமாறு சொல்லியிருந்தார்.
மாற்று நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பவர்களோடு உரையாடக்கூடியவராகவும், அத்தகையோரது கலை முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குபவராகவும் அஜீவன் இருந்தார்.
அஜீவனின் கருத்துகள் சிலவற்றில் எனக்கு அதிகம் உடன்பாடு இருந்ததில்லை. எனினும், அவ்வப்போது பல விடயங்கள் குறித்தும் என்னுடன் உரையாடியிருக்கிறார். வெளிப்படையாக எவரோடும் பேசக்கூடியவர் அவர்.
நண்பர் பிரசன்ன விதானகே அவர்கள்.இயக்கிய ‘With you without you’ (‘ஒப நத்துவ ஒப எக்க’) என்னும் திரைப்படத்தினை, சுவிஸ் நாட்டிலே சிலர் இணைந்து திரையிட்டனர். அந்தத் திரையிடல் முயற்சியில் அஜீவனும் இணைந்திருந்தார். அத் திரைப்பட உருவாக்கத்தில் நானும் இணைந்து பணியாற்றியிருந்தேன் என்பதை அறிந்திருந்த அவர், என்னை அந்தத் திரையிடல் நிகழ்விற்கு அழைத்திருந்தார்.
சிங்கள மொழியில் நன்கு பரிச்சயம் கொண்டிருந்த அஜீவன், பல சிங்கள நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்களது கலை முயற்சிகளோடு ஆழமான ஈடுபாடு அவருக்கு இருந்தது.
அவர் வாழும் காலத்தில், அவரது அனுபவங்களையும் உழைப்பையும் தமிழ்ச் சமூகம் போதிய அளவு பெற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
இப்படியானோரின் மறைவு, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான இழப்பு என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியது.
2025-09-07
அமரதாஸ்

