சூரிச் திரைப்பட விழாவில் All That’s Left of You திரைப்படம்


சூரிச் திரைப்பட விழாவில் 2025-10-03 அன்று, All That’s Left of You என்னும் பாலஸ்தீன் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அமெரிக்காவில் வசிக்கும் பாலஸ்தீன் இயக்குநரும் நடிகருமாகிய செரியன் டாபிஸ் (Cherien Dabis) இயக்கிய மூன்றாவது திரைப்படம் இது. முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.
பாலஸ்தீன் பகுதியில் மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் துயரார்ந்த வாழ்வியலை, இத் திரைப்படத்தில் அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறார் செரியன் டாபிஸ். இஸ்ரேலியப் படையினரின் தாக்குதல் ஒன்றிலே படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த பாலஸ்தீன் இளைஞரின் இதயம் ‘தானம்’ செய்யப்பட நேர்வதும், அது இஸ்ரேலிய இளைஞர் ஒருவருக்குப் பொருத்தப்பட நேர்வதும், இதயம் பெற்று வாழும் நபரை நீண்ட காலத்துக்குப் பின்னர் இதயத் தாய் சந்தித்து உரையாடுவதும் இத் திரைப்படத்தின் முக்கியமான காட்சித் தருணங்கள் ஆகியிருக்கின்றன. இறுதியில், இதயம் பெற்று வாழும் இஸ்ரேலியரைச் சந்திக்கும் பாலஸ்தீன இதயத் தாயின் உரையாடல், பலவிதமான சிந்தனைகளைக் கிளர்த்தக்கூடியது.
இத் திரைப்படத்தின் முக்கியமான காட்சித் தருணங்கள் வாயிலாக, ‘இனவாதம்’ கடந்த மனிதாபிமானத்தையும் அரசியல் நிலைப்பாடுகளையும் நுட்பமாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர்.
2005 இல், அகதிகள் முகாம் ஒன்றில் ஒரு பாலஸ்தீனியரின் 12 வயது மகன் விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இஸ்ரேலியப் படையினரால் சுடப்பட்டிருக்கிறார். தலையிலே சுடப்பட்டு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை, அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இஸ்ரேலியர்கள் அவரது உறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இது பற்றி ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை, செரியன் டாபிஸ் உரையாற்றியபோது கிடைத்த தகவல்கள்.
திரையிடல் முடிந்த பிறகு, பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் திரைப்பட உருவாக்க அனுபவங்கள் தொடர்பாகவும் செரியன் டாபிஸ் உரையாற்றினார். மிகப் பெரிய திரையரங்கை நிறைத்திருந்த அனைவரும், அவரது கருத்துகளை ஆர்வமாகக் கேட்டனர். சிலர், “Fr ee பாலஸ்தீன்!” என்னும் கோசம் எழுப்பினார்கள்.
என் இருக்கைக்கு அருகில் இளம் பெண்கள் அதிகம் இருந்தனர். பக்கத்தில் இருந்த பெண், பாலஸ்தீனிய மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் குஃபியா (kufia) என்னும் அங்கியினைக் கழுத்திலே சுற்றியிருந்தார். அதைக் காண்பித்து, நீங்கள் பாலஸ்தீனரா எனக் கேட்டேன். தான் சுவிஸ் நாட்டவர் என்றும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதனை அணிந்து வந்ததாகவும் சொன்னார். சூரிச் பல்கலைக் கழகத்தில் அரசியலும் தத்துவவியலும் கற்கிறார்.
All That’s Left of You திரைப்படத்தின் சில காட்சிகள், எனது சொந்த அனுபவங்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. தனது தந்தையின் அனுபவங்கள், இத் திரைப்படத்தை உருவாக்கப் பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டார் செரியன் டாபிஸ்.
சண்டான்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகத் திரையிடல் நிகழ்ந்த பின்னர் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத் திரைப்படம் கலந்துகொண்டிருக்கிறது.
பாலஸ்தீன் மக்கள் மீது இன அழிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், All That’s Left of You போன்ற திரைப்படங்கள் கவனம் பெறுவது அவசியமானது. ‘இந்த நேரத்தில் இந்தத் திரைப்படம் இங்கு திரையிடப்படுவது, என் வாழ்வின் மிகச்சிறந்த பரிசு ஆகும்’ என்று, கலந்துரையாடலின்போது செரியன் டாபிஸ் குறிப்பிட்டார்.
ஈழத்தமிழர் சார்ந்து, கலாபூர்வத் தருணங்களும் அரசியற் தீர்க்கமும் கொண்ட இது போன்ற காத்திரமான திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இயக்குநரும் நடிகருமாகிய செரியன் டாபிஸ் (Cherien Dabis) மற்றும் அமரதாஸ்
2025-10-05
அமரதாஸ்
