ஓவியரும் சிற்பியுமான ரமணி அவர்களுக்கு அஞ்சலி

ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு பேரிழப்பு!
சிறந்த ஓவியரும் சிற்பியுமான ரமணி அவர்கள் (வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம்) இன்று மறைந்துவிட்டார்!
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து நெருங்கிப் பழகிய காலைஞர்.
ஈழத்தில் வெளியான நூல்கள் மற்றும் பத்திரிகைகள் பலவற்றையும் அவரது பல ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன. அவருக்கென்று தனித்துவமான பாணியை உருவாக்கி எளிமையான கோடுகளால் அவர் ஏராளமான ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார். அவை, எங்கிருந்தாலும் அவருடையவை என்று இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஓவியத்துறை சார் மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாக, சிறந்த ஆசானாக விளங்கினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ‘மாவீரர் நாள்’ நினைவு நிகழ்வுகள் 1990 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டபோது, பிரத்தியேக வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு சுவரொட்டி ஓவியத்தை ரமணி வரைந்திருந்தார். அது இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அச்சிடப்பட்டது.
அந்த ‘மாவீரர் நாள்’ ஓவிய உருவாக்கம் பற்றியும் தீருவில் என்னும் இடத்திலே ‘போராளிகள்’ என்னும் பெயரில் அவர் உருவாக்கியிருந்த சிற்பத்தொகுதி பற்றியும் சில வருடங்களுக்கு முன்னர் அவருடன் உரையாடியிருந்தேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சிலரது விருப்பத்திற்கு அமைவாக, மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் உருவாக்கியிருந்த ‘போராளிகள்’ என்னும் சிற்பத்தொகுதி, பின்னர் சிறீலங்கா இராணுவத் தரப்பினரால் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது. அது அவருக்குத் தீராத துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
வட்டமான ஒரு பீடத்திலே சில போராளிகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு நிலைகளில் இருப்பது போன்று, முப்பரிமாணத் தன்மையுடன் அதனை உருவாக்கியிருந்தார்.

ரமணி உருவாக்கிய குறிப்பிடத்தகுந்த சிற்பங்கள் பலவற்றை, யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதும் காணமுடியும்.
சில ஆண்டுகளாக அவருக்கு நினைவுத் தடுமாற்றமும் கை நடுக்கமும் இருந்தது. அவரது அனுபவங்களை இயன்றவரை பதிவுசெய்யுமாறு, ஓவியரும் ரமணியின் பிரதான மாணவருமாகிய எனது தம்பியிடம் சொல்லியிருந்தேன். ரமணியின் பழைய ஓவியங்களை அவர் சேகரித்துக்கொண்டிருந்தார்.
ரமணியின் சகோதரர் சச்சி அவர்களும் (ஞானரதன் என்று அறியப்பட்ட திரைப்பட இயக்குநர்) ரமணியும் என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள். ஈழத்தின் கலை வரலாற்றில், இருவரும் மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
ஈழத்தின் கலை வரலாற்றில் அழியாத் தடம் பதித்த கலைஞர் ரமணி அவர்களுக்கு அஞ்சலி…!
2025-12-29
அமரதாஸ்
