தமிழின அழிப்பு நினைவு நாள் எப்போது?

 
இலங்கை உள்நாட்டுப் போர், முள்ளிவாய்க்கால் நிலத்தில் 2009 மே மாதம் பேரழிவுகளோடு முடிவுக்கு வந்தது. நிகழ்ந்திருக்கக்கூடாத நிகழ்வுகள் பலவும் இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்தேறின. 
 
போரை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக 2009-05-18 அன்று சிறீலங்கா அரசாங்கம் அவசரகதியில் அறிவித்திருந்தது. இதன் பின்னணியில், தமிழின அழிப்பு நினைவு நாளாக, வருடாந்தம் மே 18 ஆம் திகதி தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில், போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த திகதியோடு (மே18) போர் சார்ந்த அனர்த்தங்கள் முடிந்திருக்கவில்லை. கைதுகளும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும், 2009-05-19 அன்றும் அதன் பின்னரும் தொடர்ந்திருக்கின்றன. 
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகச்சாவு 2009-05-19 அன்று நிகழ்ந்திருப்பதையும், அதே நாளில் அவரது இளைய மகன் பாலச்சந்திரன், சிறீலங்கா அரச தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் நம்பகமான ஆதாரங்களைக் கொண்ட சுயாதீன ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது. 2009-05-19 அன்று பிரபாகரனுடன் இறுதிச் சண்டை நடந்ததாக இராணுவத் தரப்பு சொல்லியிருக்கிறது.
 
பிரபாகரனின் மரணத்தை 2009-05-19 அன்று உறுதிப்படுத்திய சிறீலங்கா அரச படைத் தரப்பினர், 2009-05-20 அன்று, முள்ளிவாய்க்கால் கடற்கரையிலே கூடிநின்று ‘போர் வெற்றி’ அறிவித்து, பல்குழல் எறிகணை செலுத்திகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பிரயோகித்துக் கடற்கரைப் பக்கம் சூடு நிகழ்த்திக் கொண்டாடியிருக்கிறார்கள்.
 
கொடிய போரிலே பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், 2009-05-19 அன்று சிறுவன் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரையும் படுகொலை செய்துவிட்டு, 2009-05-20 அன்று முள்ளிவாய்க்கால் நிலத்தில் சிறீலங்கா அரச படைத் தரப்பினர் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்த்திய வரலாற்றை, இதுவரை எவரும் முக்கியத்துவப்படுத்திப் பேசியதில்லை.
 
ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு சார்ந்த குற்றச்செயல்கள் நீண்ட காலமாகத் தொடர்வதாக நம்பப்படுகிறது. சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக, தகுந்த ஆதாரங்களோடு அவை உறுதி செய்யப்பட வேண்டியவை. எனினும், சமகாலத்தில் அரசியல் ரீதியில் அவை விவாதிக்கப்படுவதும் அம்பலப்படுத்தப்படுவதும் அவசியம்.
 
தமிழின அழிப்பு சார்ந்து பேசக்கூடிய எவரும், இலங்கை உள்நாட்டுப் போரில் நேரடியாகச் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் போர் சார்ந்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசக்கூடிய அறிவொழுக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு தரப்பின் குற்றங்களை மூடிமறைத்துக்கொண்டு இன்னொரு தரப்பின் குற்றங்களை மிகைப்படுத்திப் பேசக்கூடிய பலர், தம்மை மனித உரிமைப் போராளிகளாகவும் விடுதலை அரசியல் சார் செயற்பாட்டாளர்களாகவும் காண்பிக்க முயல்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய கசப்பான உண்மை.
 
2009-05-19 வரையும் அதன் பின்னரும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு சார் நடவடிக்கைகளை நினைவெழுச்சி சார்ந்து அம்பலப்படுத்துவதற்கும் மே 18 ஆம் திகதி அதிகம் பொருத்தமானது இல்லை.
 
மேற்குறிப்பிட்டுள்ள சில காரணங்களின் அடிப்படையில், வருடாந்தம் மே 20 ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவு நாளாக அமைக்கப்படலாம். அது அதிகப் பொருத்தமுடையதாக இருக்கும். தமிழ்த் தரப்புகள் இது பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். தமிழின அழிப்பு நினைவு நாள் என்பது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துன்பியல் வரலாற்று நிகழ்வுகளையும் விடுதலை அரசியல் சார் சிந்தனைகளையும் உள்ளடக்கிய காத்திரமான அடையாள நாளாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.   
 
இது பற்றி ஏற்கெனவே நேர்காணல் ஒன்றிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த நேர்காணல், பிரபாகரனின் தியாகச்சாவும் அவரது இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையும் 2009 மே 19 ஆம் திததியில் நிகழ்ந்தது என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கக்கூடியது. இக் கட்டுரையின் முடிவில் அதனைக் காணலாம்.
 
2026-05-20
அமரதாஸ்