பாரதிராஜா என்னும் கலைஞருக்கு அஞ்சலி

 
தமிழ் சினமாவின் குறிப்பிடத்தகுந்த, புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா அவர்கள் மறைந்துவிட்ட துயரச் செய்தி எட்டியிருக்கிறது. அன்னாருக்கு எனது அஞ்சலி…
 
2026-06-10
அமரதாஸ்
 
பல ஆண்டுகளுக்கு முன்னர் (2018), பாரதிராஜா தொடர்பாக எழுதிய பதிவில் இடம்பெற்ற சில பகுதிகள் இவை.
 
// பாரதிராஜா அவர்களின் முதலாவது வன்னி வருகையின் போது, அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரோடு பல விடயங்கள் சார்ந்தும் அப்போது உரையாட முடிந்திருக்கிறது. ‘ஆணிவேர்’ என்ற திரைப்படத்திற்கான முதல் நாள் படப்பிடிப்பு நிகழ்வைத் தொடக்கி வைத்திருந்தார். அத் திரைப்பட உருவாக்கத்திலே தொழில்நுட்ப ரீதியில் எனது பங்களிப்பும் இருந்தது.
 
பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீதான ‘மிகை’ மதிப்பீடுகள் என்னிடமில்லை. எனினும், தமிழ் சினமாவில் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை உருவாக்குமாறு பாரதிராஜாவை சந்தித்தபோது கேட்டிருந்தார். அப்போது அவரிடம் சில விடயங்களைச் சொல்லி நழுவிவிட்டார் பாரதிராஜா. ஈழப் பிரச்சினைகள் சார்ந்து அவ்வப்போது எதையாவது பேசிக்கொண்டிருக்கும் பாரதிராஜாவால் ஈழப் பிரச்சினை சார்ந்த ஒரு திரைப்படத்தை இதுவரை இயக்க முடியவில்லை. ஈழப் பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களோடும் உள்வாங்கி, ஒரு நல்ல ஈழத் திரைப்படத்தை இயக்க அவரால் முடியும் என்று தோன்றவில்லை.
 
தனது அரசியல் மேடைகளிலே பாரதிராஜாவை பயன்படுத்திவருகிற, திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட சீமான் அவர்களாலும், குறிப்பிடத்தகுந்த ஈழத் திரைப்படம் ஒன்றைக்கூட இதுவரை உருவாக்க முடியவில்லை.
 
ஈழப்போராட்ட வரலாற்றின் மீதான நேர்மையான பார்வைகளையும் பாரபட்சமற்ற அணுகலையும் கொண்டிராத தமிழ்நாட்டு இயக்குநர்களால் அரசியல் சரித்தன்மை கொண்ட நல்ல ஈழத் திரைப்படங்களை உருவாக்க முடியாது. //