ரொபேட் ரெட்போர்ட் (Robert Redford) என்னும் கலைஞர்

குறிப்பிடத்தகுந்த பல்வேறு ‘ஹொலிவூட்’ திரைப்படங்களில் நேர்த்தியாக நடித்திருக்கும் ரொபேட் ரெட்போர்ட் (Robert Redford), எட்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவர் முதலாவதாக இயக்கி 1980 இல் வெளியான Odinary People என்னும் திரைப்படமானது, ‘சிறந்த திரைப்படம்’ மற்றும் ‘சிறந்த இயக்குநர்’ உட்பட நான்கு Academy விருதுகளைப் பெற்றுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் பிரபலமான சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘சன்டான்ஸ் திரைப்பட விழா’ குறிப்பிடத்தகுந்தது. அதனை நிறுவியவர் ரொபேட் ரெட்போர்ட்.
பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் LGBTQ சமூகத்தினரின் உரிமைகள் சார்ந்த செயற்பாட்டாளராக அவர் அறியப்பட்டிருக்கிறார்.
ரொபேட் ரெட்போர்ட் மற்றும் பிரபல நடிகை டெமி மூர் (Demi Moore) ஆகியோர் நடித்த Indecent Proposal என்னும் திரைப்படம், பாலியல் நடத்தைகள் சார் உள்ளடக்கம் சார்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. திருமணம் ஆகியிருக்கும் ஒரு பெண்ணுடன் ஒரு நாளைக் கழிக்க, அவளது கணவனுக்குப் பெருந்தொகைப் பணத்தை வழங்கி ஒப்பந்தம் செய்துகொள்ளும் செல்வந்தர் ஒருவரது பாத்திரத்தில் ரொபேட் ரெட்போர்ட் நடித்திருக்கிறார்.
டொனி ஸ்கொட் (Tony Scott) இயக்கிய ‘Spy Game’, இப்போதும் நினைவில் நிற்கும் போர் சார்ந்த திரைப்படங்களில் ஒன்று.
அமெரிக்க CIA உளவாளி ஒருவர், சீனா நாட்டிலே பிடிபட்டுக் கொல்லப்படும் நிலையில் இருக்கும்போது, அரசியற் காரணங்களால் அவரது உளவுத்துறை அதிகாரிகளே அவரை வஞ்சகமாகக் கைவிடுகிறார்கள். அவரை மீட்பதற்காக, உளவுத்துறையினரை எதிர்த்தும் சொந்த வளங்களைப் பயன்படுத்தியும் அதே உளவுத்துறையின் அதிகாரி ஒருவர் சுயாதீனமாகப் போராடுகிறார். அந்த அதிகாரியின் பாத்திரத்தில் ரொபேட் ரெட்போர்ட் சிறப்பாக நடித்திருப்பார். சீனா நாட்டில் சிக்கிக்கொண்ட உளவாளியாக பிராட் பிட் (Brad Pitt) நடித்திருப்பார்.
ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலே, போராட்ட இயக்கப் பிரமுகர்கள் சிலருடன், ‘Spy Game’ திரைப்படத்தை முன்வைத்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று இது.
போராட்ட காலப் பணிகளுக்காக வெளிநாடுகளில் வசித்து, சீனா நாட்டிலும் வேறு சில இடங்களிலும் சிறைகளில் இருந்து மீண்டுவந்திருக்கும் ஒரு நண்பர், இப்போதும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.
நேற்று (2025-09-16) மறைந்துவிட்ட ரொபேட் ரெட்போர்ட் என்னும் கலைஞருக்கு என் அஞ்சலி…
2025-09-17
அமரதாஸ்


