திருகோணமலை ஐந்து வழக்கை முன்னெடுத்த வைத்தியர் மனோகரன் மறைந்தார்

 
வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் அவர்கள் இங்கிலாந்து நாட்டில் நேற்று மறைந்துவிட்ட செய்தி, மிகுந்த துயரம் தருகிறது. அன்னாருக்கு எனது அஞ்சலி…
 
வைத்தியர் மனோகரன், திருகோணமலையில் நிகழ்த்தப்பட்ட ஐந்து மாணவர்களின் படு*கொ*லை சார்ந்து நீதி கோரிப் போராடிக்கொண்டிருந்தார். இவரது மகன் மனோகரன் ரஜிகர், அந்த ஐவரில் ஒருவர். 
 
2006-01-02 அன்று திருகோணமலையில் மனோ­கரன் ரஜிகர், யோக­ராஜா ஹேமச்­சந்­திரா, லோகித­ராஜா ரொஹான், தங்­கத்­துரை சிவா­னந்தா, சண்­மு­க­ராஜா கஜேந்­திரன் ஆகிய ஐந்து மாணவர்கள் சிறீலங்கா இராணுவத்தினரால் (Sri Lankan Special Task Force) படு*கொ*லை செய்யப்பட்டனர். இந்த வழக்கு, வைத்தியர் மனோகரனின் பெரு முயற்சியால் TRINCO 5 என்னும் பெயரிலே பிரபலமாக அறியப்பட்டது.
 
அந்தக் கொடிய நிகழ்வில் சம்மந்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட 12 இராணுவ அதிகாரிகள், ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் மூலம் விடு­தலை செய்யப்பட்டனர் என்று அறியப்படுகிறது.
 
சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டுக்கு நான் சென்றிருந்தபோது, வைத்தியர் மனோகரன் வீட்டுக்குச் சென்று நேரில் அவரைச் சந்தித்து உரையாடினேன். திலீபன் அவர்களுக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நீண்டகால நண்பர் ராஜன் அவர்கள், என்னை அங்கு அழைத்துச் சென்றார். 
 
அவ்வப்போது தொலைபேசியில் என்னுடன் உரையாடும் வைத்தியர் மனோகரன், அடுத்தமுறை மகன் சார்ந்த வழக்குக்காக சுவிஸ் நாட்டுக்கு வரும்போது என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
 
மகனது இழப்பு, அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. 2020 இல் மனைவியையும் இழந்திருந்தார். அவரது மனைவி மறைந்த அன்று (2020-02-14), “My wife has passed away today peacefully.” என்று எனக்குத் தொலைபேசி மூலம் தகவல் அனுப்பியிருந்தார். 
 
த* மி*ழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்த திரு. யோகரத்தினம் யோகி அவர்களும் அவரது தம்பி யோகரத்தினம் குகன் (லெப். கேணல் பொன்னம்மான்) அவர்களும் வைத்தியர் மனோகரனின் நெருங்கிய உறவினர்கள். மிகச் சிலருக்கு மட்டுமே இது தெரியும். அண்மையில், அந்த இரு சகோதரர்களின் போராட்ட காலத் தியாக வாழ்வு தொடர்பாகவும் உரையாடினேன். யோகி தொடர்பான பல விடயங்களையும், அவரோடு நெருங்கிப் பழகிய என்னிடமிருந்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
 
ஐந்து மாணவர்களின் படு*கொ*லை சார்ந்த வழக்கை, ஐ. நா. மனித உரிமைகள் சபை மற்றும் Amnesty International போன்ற சர்வதேசத் தளங்களுக்கு எடுத்துச்சென்று நீதிக்காக இயன்றவரை போராடியும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
 
மனோகரனின் மகன் படு*கொ*லை செய்யப்பட்ட வழக்கை, இங்கிலாந்தின் பிரபல வழக்கறிஞர் Amal Clooney அவர்கள் பணம் பெறாமலே கையாண்டுகொண்டிருந்தார். அவரும் அவரது கணவர் George Clooney (பிரபல ஹொலிவுட் நடிகர்) அவர்களும் மனோகரனின் மனைவி மறைந்த பின்னர் அவரது வீட்டுக்குச் சென்று மனோகரனைச் சந்தித்திருந்தார்கள்.  படு*கொ*லைக்கு உள்ளான அவரது மகன் சார்ந்த விடயங்களைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் கொண்டிருந்தார் George Clooney. அது நடைபெற்றால் மகனின் வழக்கு அதிகம் கவனம் பெறும் என்று நம்பிக்கொண்டிருந்தார் மனோகரன். அவரது மறைவுக்குப் பின்னர், இனி அது நடைபெறுமா என்று தெரியவில்லை. அரசியல் சார்ந்த அக்கறைகளோடு அமெரிக்கத் திரையுலகில் இயங்கும் George Clooney போன்றவர்கள் இத்தகைய விடயங்களை நேர்மையுடன் கையாளும் நிலை உருவாக்கப்படுவது அவசியமானது. 
 
மகனை இழந்த தந்தை, எதிர்பார்த்த நீதி கிடைக்காமலே 84 வயதில் சாவடைந்துவிட்டார். இது தமிழ்ச் சமூகத்தின் கூட்டுத் துயரம்.
 
2025-09-22
அமரதாஸ்