சூரிச் திரைப்பட விழா 2025

நேற்று, சூரிச் திரைப்பட விழாவின் மூன்றாம் நாள் (2025-09-27) நிகழ்வுகளிற் கலந்துகொண்டேன்.
சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் Ballad of a Small Player என்னும் திரைப்படம் பார்த்தேன். Lawrence Osborne என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்ட All Quiet on the Western Front என்னும் பிரபலமான திரைப்படத்தை இயக்கிய ஜேர்மன் இயக்குநர் Edward Berger அதனை இயக்கியிருந்தார். அதில் Colin Farrell முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத் திரைப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன் Colin Farrell பங்கேற்ற சிறப்பு நிகழ்வில், அவருக்கு ‘கோல்டன் ஐகோன் விருது’ (Golden Icon Award) வழங்கப்பட்டது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவர், பிரபலமான பல ஹொலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘Nuremberg’ விசாரணைகளை அடிப்படையாகக் கொண்ட, பிரபல நடிகர் Russell Crowe நடித்துள்ள Nuremberg (2025) என்னும் திரைப்படம் திரையிடப்பட்டது. அத் திரைப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன் Russell Crowe கலந்துகொண்ட சிறப்பு நிகழ்வில், அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Lifetime Achievement Award) வழங்கப்பட்டது.
Gladiator (2000), A Beautiful Mind (2001) போன்ற திரைப்படங்கள் வாயிலாக Russell Crowe வும் Phone Booth (2002), Alexander (2004) போன்ற திரைப்படங்கள் மூலம் Colin Farrell உம், போர்க்கால வன்னியில் நான் இருந்த காலத்தில் நல்ல நடிகர்களாக அறிமுகமாகியிருந்தார்கள். அவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றின் bluray பிரதிகளைச் சேகரித்து வைத்திருந்தேன். (இடப்பெயர்வு சார்ந்த அலைக்கழிவுகளால் அவையெல்லாம் அழிந்தன என்பது வேறு கதை.) சிலவற்றை ரதன் கலையகத்தினர் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருந்தார்கள்.
Russell Crowe மற்றும் Colin Farrell ஆகியோர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்துகொண்டதும், அவர்கள் நடித்திருக்கும் புதிய திரைப்படங்களை அவர்களோடு பிரமாண்டமான திரையரங்கிலே (Kongresshaus, Zurich) பார்க்க முடிந்ததும் நல்ல அனுபவம். சர்வதேசத் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட, திரைத்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.



2025-09-28
அமரதாஸ்
