போர்க்கால ஒளிப்படங்களில் ஊசலாடும் நினைவுகள்

இலங்கை உள்நாட்டுப் போர்க்காலத்தில் என்னால் உருவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள் தொடர்பாக, தனது பதிவு ஒன்றில் நண்பர் இளங்கோ குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதிய பின்வரும் பகுதி, பல்வேறு நினைவுகளைக் கிளர்த்தியது.
“சில வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது சுவிஸில் சூரிச் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சியொன்று நடைபெறுவதை அறிந்து அங்கே போயிருந்தேன். அது ஈழத்தில் இறுதியுத்தம் நடைபெற்றபோது அமரதாஸ் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி. வளாகத்தில் திறந்தவெளி அரங்கின் மையத்தில் அவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
என்னால் ஒருபோதும் போர்க்கால அழிவுகளின் புகைப்படங்களை நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. இந்தப் புகைப்படங்கள் இயன்றளவு கோரத்தை மறைக்கும் கறுப்பு – வெள்ளைப் புகைப்படங்களாக இருந்தபோதும் அவற்றில் இருந்து விலகிப் போகவே விரும்பினேன். ஆகவே உயர்ந்துபோய்க்கொண்டிருந்த படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்து புகைப்படங்களை அல்ல, அவற்றைப் பார்க்கும் மனிதர்களின் உணர்ச்சிநிலைகளை அவதானித்துக் கொண்டிருந்தேன்.
அமரதாஸ் எனக்கு அறிமுகமான நண்பர் என்கின்றபோதும், அவருக்கு என் வரவை அறிவிக்காதே சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் அமரதாஸ் இருக்கவில்லை. இப்படி புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன் என இன்னொரு நண்பரான புகைப்படக் கலைஞரான ஜெயந்தனிடம் சொன்னபோது அவர் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
இதற்கு முன் நடந்த இவ்வாறான புகைப்படக் கண்காட்சியில் இது நடந்திருக்கின்றது. புகைப்படங்களை காட்சிப்படுத்திய ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு மூதாட்டி வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் ஏன் தினம் வருகின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கின்றது. விசாரித்தபோது, யுத்தத்தில் காணாமற்போய்விட்ட தனது மகன் இந்தப் புகைப்படங்களில் இருக்கின்றாரா எனத் தேடியிருக்கின்றார்.
இத்தனை காலத்துக்குப் பிறகு மகன் உயிரோடு இருக்கமாட்டார் என்று அவரின் உள்மனது அறிந்திருக்கக்கூடும். ஆனால் அவர் தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் போரின் நிமித்தம் அனைத்தையும் தொலைத்து, மகனின் புகைப்படம் எதுவும் கூட அவரின் கையில் இறுதியில் எஞ்சாமலும் போயிருக்கலாம். ஆகவே நிஜத்தை மீண்டும் நினைவில் கொண்டுவர வந்திருக்கலாம். இன்னொரு வகையில் இவ்வாறு புகைப்படங்களைப் பார்த்து ஒருவகையான ஆற்றுப்படுத்தலை அவர் செய்வதாகக் கூட இருக்கலாம். அதாவது தனியொருத்தியின் துயரமாக அல்லாது, ஒரு கூட்டுச் சமூகத்தின் இழப்பாக தன் துயரத்தைக் கரைத்துவிட அவர் முயன்றிருக்கலாம்.
அமரதாஸின் இந்தப் புகைப்படங்கள், பின்னர் தொகுக்கப்பட்டு ஒரு புகைப்பட நூலாக ‘Through The Fire Zones’ என்ற பெயரில் வந்திருக்கின்றது.”
***
நண்பர் ப. அ. ஜெயகரன், அண்மையில் எனது நூல் குறித்து எழுதியிருந்த பின்வரும் குறிப்புகளும் பல்வேறு நினைவுகளைக் கிளர்த்துகின்றன.
“போர்-வாழ்வு-ஒளிப்படம்
சுயாதீன பத்திரிகையாளரான அமரதாசின் ஒளிப்படங்கள், ஈழத்தின் இறுதிப் போரின் ஆவணமாக தொகுக்கப்பட்டு ‘Through the fire zones’ எனும் ஒளிப்பட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. எமது இனிமையான காலங்களை போர் கொன்றொழித்துக்கொண்டிருக்கும்போது, வாழ்வின் கணங்களை அமரதாஸ் ஒளிப்படங்களாய் பதிவாக்கியிருக்கிறார். இந்த ஒளிப்படத் தொகுப்புக்குள்ளால் மனிதாபிமானம் மிக்க ஒரு கலைஞனை நாம் இனங்காண முடியும். தமிழர் இனப்படுகொலையை துல்லியமாய் ஆவணப்படுத்துவதில் அமரதாசின் பங்களிப்பு மிக முக்கியமானது. நம் வரலாற்றில் எஞ்சியுள்ள மிகப்பெரிய ஆவணமாய் அவரது நூல் திகழ்கிறது. குருதியும், பிணங்களும், வலி தோய்ந்த முகங்களும் நம்மை உருக்குலைத்துக்கொண்டு இருப்பினும் நம் வாழ்வின் நம்பிக்கை இழக்காது பயணித்த மக்களின் ஓர்மம் நம்மை ஆட்கொள்ளுகிறது. இந் நூலில் வாழ்வு எவ்வாறு கொலைக்களம் நோக்கி நகர்த்தப்படுகிறதென்பதை ஒளிப்படங்கள் காலத்தோடு எம்மை நகர்த்திச் செல்கின்றன.
அமரதாசின் ‘Through the fire zones’ ஒளிப்படத் தொகுப்பு இனப்படுகொலை குறித்து வெளியான முதலாவது நூல். இதில் அவரொரு நுட்பம்மிக்க புகைப்படவியலாளராகவே இனங்காணப்பட்டாலும், போரின் ஊடான அவரது அனுபவத் தொகுப்பு மிக முக்கியமானது. அதை அவர் வெளிக்கொணர வேண்டும்.”
***
இளங்கோ விற்கு நண்பர் ஜெயந்தன் சொன்னது போன்று, எனது போர்க்கால ஒளிப்படங்கள் சார்ந்து துயரார்ந்த, விசித்திரமான, ‘நல் வாய்ப்பு’ நிறைந்திருந்த பல சம்பவங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கின்றன.
***
இலங்கை இறுதிப்போரின் இறுதிக் கட்டத்திலே கொல்லப்பட்டுள்ள, தப்பிப்பிழைத்த தமது உறவினர்களும் நண்பர்களும் எனது ஒளிப்படங்களில் இருப்பதை அவ்வப்போது பலரும் கண்டறிந்திருக்கிறார்கள்.
போர் தீவிரமடைந்திருந்த ஒரு நாளில், முள்ளிவாய்க்கால் பகுதியிலே பதுங்குகுழி ஒன்றின் வாசலில் அமர்ந்து எனது கமெராவில் இருந்த ஒளிப்படங்களை மடிக்கணினிக்கு மாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு பெண், என் அருகில் வந்து எனது முந்தைய ஒளிப்படங்களைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். தனது நெருங்கிய ஆண் உறவினர் ஒருவர் காணாமற் போயிருப்பது பற்றிச் சொல்லி, அவரைக் கண்டுபிடிக்க உதவும்படி வேண்டினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், முறைகேடாகத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. இடப்பெயர்வின்போது, தனது உறவினரை அந்த இயக்கத்தினர் பிடித்துக் கொண்டுபோயிருப்பார்கள் என்னும் சந்தேகமும் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. சிறீலங்கா அரச படைகளின் குண்டுத் தாக்குதல்களும் வி. பு. இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரமாகியிருந்த சூழலில், இடப்பெயர்வும் அவலச் சாவுகளும் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், எப்படியோ பல வாரங்களுக்கு முன்னரே காணாமற் போயிருந்த ஒருவரை எப்படித் தேடிக் கண்டடைவது?
எனது மடிக்கணினியில் இருந்த போர்க்கால ஒளிப்படங்கள் சிலவற்றை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில், அவர் தேடிக்கொண்டிருந்த உறவினரை இறந்திருக்கும் நிலையிலே கண்டுபிடித்து உறைந்துபோனார். விபரிக்கக் கடினமானது அந்தச் சூழ்நிலை. இப்போது, எங்காவது அவர் இருப்பாரோ என்னவோ?
2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் அவர் எனது மடிக்கணினியில் ஒளிப்படங்களைப் பார்த்தார். அந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில், ஒரு தற்காலிக மருத்துவ நிலையத்திற்கு வெளியே, ஏற்கெனவே இறந்திருந்த பலரின் உடல்களுக்கு மத்தியில் அந்த இளம் ஆணின் உடலும் அனாதரவாகக் கிடந்தது. எப்போதாயினும் தேவைப்படக்கூடும் என்று உள்ளுணர்வு உந்த, அந்த முகத்தை நெருக்கமாக ஒளிப்படம் ஆக்கியிருந்தேன்.
***
சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற எனது ஒளிப்படக்காட்சி நிகழ்வு ஒன்றிலே கலந்துகொண்ட எனது நண்பர் ஒருவர், ஒரு ஒளிப்படத்தில் இருக்கும் சிறுமியை இனங்கண்டு ஆச்சரியப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவராக அவர் செயற்பட்ட காலத்தில், அந்தச் சிறுமியுடனும் அவளது குடும்பத்தினருடனும் நெருக்கமாக இருந்தவர். இலங்கை இறுதிப்போர் முடிந்து ஒரு தசாப்த காலம் கடந்த நிலையில், அவர் மூலம் அந்தச் சிறுமியின் தொடர்பு கிடைத்தது. இப்போது அவள் சிறுமி அல்ல; மருத்துவ உயர் கல்வியைத் தொடரும் இளம் பெண். இறுதிப் போரிலே மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவளுடனும் அவளது தாயுடனும் உரையாட முடிந்தது. அவளும் அவளது தாயும் அவளது தம்பியும் சிறீலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதலில் 2009 பெப்ரவரி மாதத் தொடக்கத்திலே காயமடைந்தபோது, அவளது தந்தை அதே இடத்திற் கொல்லப்பட்டார். அப்போது காயமடைந்திருந்த அவர்கள் எல்லோரையும் ஒளிப்படங்களிற் பதிவுசெய்திருந்தேன். பல்வேறு நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட ஒளிப்படக்காட்சிகளில் அவையும் சேர்க்கப்பட்டிருந்தன. அண்மையில் வெளியான எனது ஒளிப்பட நூலிலும் (‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’) அவை இடம்பெற்றுள்ளன.
***
அவ்வப்போது பலரின் வேண்டுகைகளை ஏற்று, எப்படியோ சாவடைந்திருந்த பலரை ஒளிப்படங்களாகப் பதிவுசெய்ய நேர்ந்திருக்கிறது. பலவற்றைப் போர்க்கால நெருக்கடிகளால் இழக்க நேர்ந்துவிட்டாலும், சிலவற்றைப் பாதுகாத்து இப்போதும் வைத்திருக்கிறேன்.
2009 ஏப்ரல் மாதப் பிற்பகுதியில் ஒரு நாள், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவ நிலையத்தின் முன்பாக, இறந்துபோயிருந்த இளவயது மகனின் உடலைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலையில் ஒரு தாய் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார். அந்த உடலையும் வேறு பல உடல்களோடு உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றிக் கொண்டுபோய்ப் புதைப்பதற்காக யாரோ காத்திருந்தார்கள்.
அந்தரிப்பான அந்த இறுதிச் சூழ்நிலையிலும், மகனது உடலை ஒளிப்படமாக்கித் தருமாறு அந்தத் தாய் என்னிடம் அழுதழுது வேண்டினார்.
எதற்குமே உத்தரவாதம் அற்ற அந்த அபாயகரமான போர்ச்சூழலில், எங்கேனும் என்னை அவர் மீளச் சந்தித்து, உயிர் இழந்த மகனின் ஒளிப்படத்தைப் பெறமுடியுமா? எப்போதாயினும் அவர் என்னைச் சந்திக்க நேர்ந்தால், என் கையில் அவரது மகனின் உடல் இருக்குமா? எப்போதாவது சந்தித்துக்கொள்ள நான் இருப்பேனா; அவர் இருப்பாரா?
எண்ணங்கள் அலைமோத, முன் அறிமுகம் இல்லாத அந்தத் தாயின் வேண்டுகோளுக்காக, இறந்து கிடந்த அவரது மகனின் உடலை ஒளிப்படம் ஆக்கினேன். பிறகு, அழுதுகொண்டேயிருந்த அந்தத் தாயின் முகத்தையும் உள்ளுணர்வின் உந்துதலில் ஒளிப்படமாகப் பதிவுசெய்தேன்.
போர் முடிந்த பின்னரும், எங்குமே நான் அவரைச் சந்திக்க முடிந்ததில்லை. ஆனால், அந்தத் துயரார்ந்த தாயின் முகத்தையும் அவரது மகனின் உடலையும் இன்னமும் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். சுமைகளும் துயர்களும், எப்போதும் என்னோடு தொடரக்கூடுமோ?
அந்தத் தாயை, எப்போதாவது சந்திக்கக் காத்திருக்கிறேன். அவர் கேட்டு நான் உருவாக்கிய ஒளிப்படத்தை அவரிடமே கையளிக்க வேண்டும்.
இதுவரை எங்கும் வெளியிடாமலே பாதுகாத்து வைத்திருந்த இந்த இரண்டு ஒளிப்படங்களையும், இப்போது முதன்முறையாக இத்துடன் வெளியிடுகிறேன். கொடிய போரில் இருந்து தப்பிப்பிழைத்து என்னைப் போல அந்தத் தாயும் உயிரோடு இருந்தால், எப்படியாவது அவரைச் சென்றடையக்கூடும். அவரை நான் கண்டடைய இவை உதவக்கூடும்.
***
2009 பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள், ‘சுதந்திரபுரம்’ பகுதியில் இயங்கிய தற்காலிக வைத்திய நிலையத்திற்குப் பின்புறமாக, இறந்தவர்களின் உடல்கள் அடுக்கப்பட்டு அகற்றப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு உடல்களுக்கு நடுவில் உறைந்துபோயிருந்த ஒரு பெண் போராளி, கமெராவோடு சென்ற என்னைக் கண்டு ஓடி வந்தார். ‘அடக்கம்’ செய்வதற்கு அனுப்பப்படவிருந்த அந்த இரண்டு உடல்களையும் ஒளிப்படங்களாக்கித் தருமாறு உருக்கமாக வேண்டினார். மூடியிருந்த பொலித்தீன் பொதிகளை விலக்கிச் சரிசெய்து, ஒளிப்படங்களைப் பதிவுசெய்ய வசதியாக, அந்த முகங்களைத் திருப்பி எனக்குக் காண்பித்தார். ஒரு முகம் அவரது அம்மாவுடையது. மறு முகம் அவரது அக்காவுடையது. ஐயோ…
அந்தப் பெண் போராளியின் அம்மாவினதும் அக்காவினதும் முகங்களை மட்டுமல்ல, அவரையும் அப்போது ஒளிப்படங்களிற் பதிவுசெய்தேன். அவற்றையும் பாதுகாத்து வைத்துக்கொண்டு அவருக்காக இப்போதும் காத்திருக்கிறேன். இரண்டு உடல்களையும் ஒரு ‘பிக்கப்’ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவசரகதியில் அன்று சென்றுவிட்ட அவர், போரில் இருந்து தப்பிப்பிழைத்து எங்காவது இருக்கக்கூடும். அவரது உறவுகளைக் கொன்றொழித்த கொடிய போர், அவரை விட்டு வைத்திருக்குமா?
தனது சகோதரி ஒருவர் ‘வெளிநாடு’ ஒன்றில் வசிப்பதாக, அந்தப் பெண் போராளி என்னிடம் சொன்னதாய் நினைவிருக்கு. அந்தச் சகோதரிக்குக் காண்பிக்க வேண்டுமென்றே அப்போது ஒளிப்படங்களை உருவாக்கித் தருமாறு அவர் என்னிடம் கேட்டிருக்க வேண்டும்.
இதுவரை வெளியிடப்படாதிருந்த விழிமூடிய அந்த இரண்டு முகங்களை இப்போது வெளியிடுகிறேன். ‘பிக்கப்’ வாகனத்தில் இரண்டு உடல்களையும் ஏற்றிவிட்டு விம்மிக்கொண்டிருந்த அந்தப் போராளி இருக்கும் ஒளிப்படத்தையும் மேலதிகமாக வெளியிடுகிறேன். (முகம் மறைக்கப்பட்டது.) அவரோ அவரது உறவினர்களோ இந்தப் படங்களைக் கண்டு என்னைத் தொடர்புகொண்டால், இவற்றோடு தொடர்புடைய ஏனைய படங்களையும் கையளிக்க முடியும்.


***
ஆனந்தபுரம் சுற்றிவளைப்புச் சமரிலும் அதற்குப் பின்னரான சண்டைகளிலும் தியாகச்சாவடைந்த போராளித் தளபதிகளான தீபன், துர்க்கா, விதுசா, சூசை, சொர்ணம், ஜெயம், பொட்டு, பானு போன்றோரும் வேறு பல போராளிப் பிரதிநிதிகளும் ஒரு ‘அந்தரங்க’ நிகழ்வை முன்னிட்டு ஒரே இடத்திற் கூடியிருந்தனர். கமெராவோடு அருகில் இருந்த நான், அங்கு பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்தேன். ஆனந்தபுரம் பகுதிக் களமுனைகளில் இருந்து வந்திருந்த சில தளபதிகள், மீளவும் அங்கேயே செல்லக் காத்திருந்தார்கள்.
‘கேணல்’ தரநிலை வழங்கப்பட்டிருந்த ஒரு போராளித் தளபதி, சிறீலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதலில் அப்போது தியாகச்சாவு அடைந்திருந்தார். அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அது பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது. போராளிகள் தரப்பிலே பேரிழப்பாகக் கருதப்பட்ட அவரது சாவு பற்றிய தகவல்கள், பொதுவெளிக்குச் செல்லாமல் மறைக்கப்பட்டது. அப்போதும் இயங்கிக்கொண்டிருந்த ‘புலிகளின் குரல்’ வானொலியில் அவரது சாவு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. (போராளிகளின் சாவுகள் தொடர்பாக, அந்த வானொலி மூலம் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தமது பிள்ளைகளின் பெயர்கள் அதில் வந்துவிடக்கூடாது என்னும் பரிதவிப்போடு பெற்றோர்கள் பலரும் அந்த வானொலியைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.)
அன்று, வாதையேற்றும் உள்ளுணர்வோடு பிரத்தியேகச் சிரத்தை கொண்டு நான் உருவாக்கியிருந்த ஒளிப்படங்களில் உள்ளடங்கியிருந்த எவருமே இன்றில்லை. சூழ்ச்சிகளும் தந்திரங்களும் நிறைந்த, பேரிழப்புகளைப் பெருக்கிக்கொண்டிருந்த, வெல்லப்பட முடியாத கொடிய போரில் இருந்து தப்பிக்கவே முடியாத நிர்ப்பந்தச் சூழ்நிலையில் அவர்கள் எல்லோரும் சிக்குண்டிருப்பதை நிச்சயமாக அன்று உணர்ந்திருந்தேன்.
அன்றைய நாளிலே சந்தித்து உரையாடியிருந்த சில போராளிகளை அதற்குப் பின்னர் சந்திக்கவே முடிந்ததில்லை. ஆனந்தபுரம் பகுதி முற்றுகைக்கு உள்ளாகிக்கொண்டிருந்த நிலையில், மீளவும் அங்கே சென்றிருந்த பலரது சாவுச் செய்திகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. மிகச் சிலர் மட்டுமே முற்றுகைக்குள் இருந்து மீண்டு வந்தனர். தளபதி தீபன் படுகாயம் அடைந்தபோது அங்கு செல்லவிருந்த போராளி மருத்துவருக்குப் பதிலாகச் சென்றிருந்த அவரது மருத்துவ நண்பர், திரும்பி வரவே இல்லை.
எனது நீண்டகால நண்பர்களாகிய அந்த மருத்துவர்கள் இருவரையும், மாத்தளன் வைத்திய நிலையப் பகுதியில் 2009 மார்ச் மாதத்திலே காயமடைந்த மக்கள் மத்தியில் இணைந்து பணியாற்றியபோது ஒளிப்படங்களிற் பதிவுசெய்திருந்தேன். அவற்றில் ஒன்றை எனது ஒளிப்பட நூலில் (‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’) இணைத்திருக்கிறேன். அந்த ஒளிப்படத்தில் இருக்கும் மருத்துவ நண்பர், இறுதிப் போரில் இருந்து எப்படியோ தப்பிப்பிழைத்து இப்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார். அவரது அனுமதியுடனேயே அந்த ஒளிப்படத்தை எனது ஒளிப்பட நூலில் இணைத்திருந்தேன். அந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு, அண்மையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றபோது அங்கு வந்து என்னைச் சந்தித்திருந்தார்.
இப்போதைக்கு இவ்வளவும் போதும். வலியேற்றும் துயரார்ந்த அனுபவங்களையும் மறக்க விரும்பும் கொடிய நினைவுகளையும் இப்போதும் பாதுகாக்கிறேன். எப்போதாயினும், வரலாற்று உண்மைகள் அறம் பிசகாமற் பதிவாக்கப்பட வேண்டும்.
2025-09-03
அமரதாஸ்
